பாலகோட் தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் : ஜெயிஷ் இ தீவிரவாதிகள் 170 பேர் உயிரிழப்பு, சிகிச்சையில் 45 பேர்..?

share on:
Classic

இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 170 ஜெயிஷ் இ தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இத்தாலி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெயிஷ் இ தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெயிஷ் இ தீவிரவாத முகாம் இந்திய விமானப்படையினர் வான்வழி தாக்குதலில் நடத்தியதில் அதிகளவிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்தியா தெரிவித்தது. சர்வதேச ஊடகங்கள் இதனை மறுத்த நிலையில் பாகிஸ்தான் அரசும் ஒருவர் கூட கொல்லப்படவில்லை எனவும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கா மரினோ என்ற பத்திரிகையாளர் பாலகோட் தாக்குதலில் 130 - 170 ஜெயிஷ் இ பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 26ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ள அவர், இரண்டரை மணி நேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்த 45 பேருக்கு ஹர்கர் - உல் - முஜாஹிதீன் முகாமில் அந்நாட்டு ராணுவ மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஜெயிஷ் இ உறுப்பினர்கள் இவ்விவகாரம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என பணம் வழங்கியதாக தெரிவித்துள்ள மரினோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பயிற்சி முகாம் தற்போதும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உடல்நலம் தேறிய பயங்கரவாதிகள் ராணுவத்தின் கஸ்டடியில் உள்ளதாகவும் கூறியுள்ளார் மரினோ.

News Counter: 
100
Loading...

Ramya