பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் மக்களுக்கு விடுதலை கிடைக்குமா..?

share on:
Classic

உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளையும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. அது போலவே இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுசிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை விடுப்பதோடு, அவ்வப்போது அதற்கான  போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். 

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், பாரதத்தின் ஒரு பகுதியாக விளங்கிய பலுசிஸ்தான், காரன், மாக்ரன், லாஸ் பெலா, கலாட் என்ற 4 மண்டலங்களை தன்னில் கொண்டிருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் பாரதம் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிளவுபட்டது. அந்நிலையில், பலுசிஸ்தான் மண்டல அரசர்கள் விரும்பினால், இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம்  இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி அறிவித்தார்.

அந்த சமயத்தில் 4 மண்டலங்களுக்கும் பொறுப்பு வகித்த மன்னர் மீர் அஹ்மத்யார் கான், பலுசிஸ்தான் தனி நாடாக சுதந்திரத்துடன் செயல்படும் என அறிவித்தார். ஆகஸ்ட் 15, 1947-ல் இருந்து மார்ச் 27, 1948 வரை 8 மாதங்களுக்கும் மேலாக அது சுதந்திர நாடாகவே செயல்பட்டு வந்தது. அந்த 8 மாத காலம் வரை கராச்சியில் உள்ள மன்னரின் மாளிகையில் பலுசிஸ்தானின் தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. 

ஆரம்பத்தில் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரித்த முகம்மது அலி ஜின்னா, ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே தனது முடிவை மாற்றிக் கொண்டு பாகிஸ்தானுடன் பலுசிஸ்தானும் இணைய வேண்டும் என மீர் அஹ்மத்யார் கானுக்கு  நெருக்கடி கொடுக்க தொடங்கினார். எதற்கும் பணியாத பலுசிஸ்தான் அரசு பாகிஸ்தானுடன் இணைய மறுத்து, பிப்ரவரி 21ம தேதி, பலுசிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், பலுசிஸ்தானின் எதிர்காலம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அதில் தெரிவித்தது.

 
இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத பாகிஸ்தான் மார்ச் 18, 1948-ல் பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் இணைந்து விட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த  மீர் அஹ்மத்யார் கான், 4 சமஸ்தானங்களுக்கான வெளியுறவுக் கொள்கைகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஜூலை 1947ல் இங்கிலாந்து அரசு தங்களுக்கு வழங்கிவிட்டதாகத் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு மார்ச் 26, 1948-ல் பலுசிஸ்தான் பகுதிகளுக்குள் ராணுவங்களை பயன்படுத்தி நாட்டை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தது

இந்த செயல்களால் அதிர்ச்சி அடைந்த மீர் அஹ்மத்யார் கான் உடனே பலுசிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு மறுத்து விட்டது.இந்திய அரசின் நிராகரிப்பை அடுத்து வேறு வழி இல்லாமல், பாகிஸ்தானுடன் பலுசிஸ்தான் இணைய சம்மதம் தெரிவித்ததையடுத்து, பாகிஸ்தானுடன், பலுசிஸ்தான் இணைவதாக மார்ச் 27, 1948ல் மன்னர் மீர் அஹ்மத்யார் கான் அறிவித்தார். மறுநாளே, அவரை கராச்சிக்கு அழைத்து வந்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார் ஜின்னா. ஏப்ரல் 1, 1948ல், பலுசிஸ்தான், பாகிஸ்தானுடன் இணைந்தது. இதனை ஏற்க  பலுசிஸ்தான் நாடாளுமன்றம் மறுத்த நிலையிலும் அதனை துட்சமென கருதி பாகிஸ்தான் அரசு தான் எண்ணிய காரியத்தை நிறைவேற்றி கொண்டது.

 

பாகிஸ்தானுடன் பலுசிஸ்தான் இணைந்த நாளை, பலூச் மக்கள் இன்னமும் கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் நிகழ்ந்து 70 ஆண்டுகள் ஆகியும், இன்னும் அங்குள்ள பல தரப்பட்ட மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல், பல காலங்களாக தனி நாடு என்ற கோரிக்கையை முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் தனது 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், #BalochistanSolidarityDay என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து உலகமக்களிடையே தங்களது கோரிக்கைக்கான ஆதரவை பெற்று வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

Saravanan