கோட்சே குறித்த சர்ச்சை கருத்து : கடும் எதிர்ப்புகளை அடுத்து மன்னிப்பு கோரினார் பிராக்யா..!!

share on:
Classic

பாஜக வேட்பாளர் சாத்வி பிராக்யாவின் கோட்சே குறித்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததையடுத்து, பிராக்யா மன்னிப்பு கோரியுள்ளார். 

கமல்ஹாசனின் கோட்சே குறித்த கருத்துக்கு பதிலளித்த அவர் “ நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக தான் இருந்தார். அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார்” என்று தெரிவித்தார். போபால் பாஜக வேட்பாளரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா பிராக்யாவின் இந்த கருத்து, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்பட்ட அவமானம் என்று குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் “ தேசத்தந்தையை கொன்றவரை பாஜகவினர் உண்மையான தேசபக்தர் என்று அழைக்கின்றனர். இது நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். காந்தியக் கொள்கைகள் மீதான தாக்குதல்” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “ மோடி மற்றும் அமித்ஷா இதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாதுராம் கோட்சே ஒரு கொலை குற்றவாளி. அவரை தேசபக்தர் என்று பெருமைப்படுத்துவது நாட்டிற்கு செய்யும் துரோகம்” என்று விமர்சித்தார்.

இதனையடுத்து தான் கூறிய கருத்து தவறு என்று பிராக்யா மன்னிப்பு கோரியுள்ளார். நான் மகாத்மா காந்தியை பெரிதும் மதிக்கிறேன். நான் யாரையும் புண்படுத்த அவ்வாறு கூறவில்லை, என்னுடைய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன் ” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya