காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 100 கோடி பேரம் பேசிய பிஜேபி..?

share on:
Classic

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பிஜேபி சார்பில் 100 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக-விற்கு பின்னடைவு :

அண்மையில் நடந்து முடிந்த  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தின. தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியை பிடித்தன.சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட நிலையில், மோடி அலை ஓய்ந்து விட்டதாகவும், பாஜக தனது செல்வாக்கை இழக்க தொடங்கி விட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
 

 

காங்கிரசை கவிழ்க்க 100 கோடி பேரம்:

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களையும் பாஜக 109 இடங்களையும் கைப்பற்றியது. இந்நிலையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக எம்.எல்.ஏ-க்கள் சிலர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பைஜ்நாத் குஷ்வாஹாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு 100 கோடி பணம் மற்றும் அமைய உள்ள புதிய பிஜேபி அமைச்சரவையில் அமைச்சர் பதவி என பாஜக எம்.எல்.ஏ-க்கள் பேரம் பேசியதாக திக் விஜய் சிங் குற்றம் சாட்டினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ குஷ்வாஹா அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
 

 

குற்றச்சாட்டை மறுக்கும் பிஜேபி:

காங்கிரஸ் கட்சி விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற வதந்திகளை பரப்பி வருவதாக பிஜேபி குற்றம்சாட்டி உள்ளது. திக்விஜய் சிங் இவ்வாறு குற்றம்சாட்டுவதற்கு ஆதாரங்கள் உள்ளதா எனவும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் திக்விஜய் சிங் வதந்திகளை பரப்புவதில் வல்லுநர் என்றும், பிஜேபி - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எந்த இடத்தில் சந்தித்தனர் என்பதை திக்விஜய் சிங் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அது சம்மந்தமான வீடியோவை வெளியிடட்டும் என்றும் அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

youtube