மெகா கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் மாயாவதி...

share on:
Classic

அகிலேஷ் யாதவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதை முன்னிட்டு ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனொரு பகுதியாக, உத்தரபிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாயாவதி, 

"பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் தூக்கங்களை கலைப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு தான் இது. இன்று நாங்கள் வெளியிடும் அறிவிப்புகளால் மோடியும் அமித் ஷாவும் தூக்கமின்றி தவிக்கப்போகிறார்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம். ஆகையால் தற்போதைய இணைவு எனக்கும் அகிலேஷுக்கும் புதிதான ஒன்றாக இருக்காது. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு எங்களது கூட்டணி இப்போது பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சமாஜ்வாடி வேட்பாளர்கள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். 2 மக்களவை தொகுதிகள் மற்ற கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நன்கறிந்து செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மிகவும் எளிதான ஒன்று என நான் நம்புகின்றேன். நாங்கள் இருவரும் அதாவது பகுஜன் சமாஜும், சமாஜ்வாடியும் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றோம். உத்தரபிரதேச மாநிலத்தின் மேம்பாட்டிற்காக 2 கட்சியினரும் ஒன்றிணைந்து உழைக்கவுள்ளோம்" இவ்வாறு கூறினார். 
 

News Counter: 
100
Loading...

mayakumar