அமமுக அலுவலகத்தில் அடுத்தடுத்து சோதனை..கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!

share on:
Classic

அமமுக அலுவலகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனைகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு, பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், அங்கு சென்றனர். அப்போது, அலுவலகத்திற்குள் நுழைய அமமுக தொண்டர்கள் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு வரை சென்றதால் போலீசார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் இருந்து 1.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமமுக நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சாத்தூர் அருகே எதிர்கோட்டையில் உள்ள அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியனின் அலுவலகத்தில் பணப்பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்த நிலையில், அங்கும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் மாலையில் ரூ.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

இதனை முற்றிலும் மறுத்துள்ள தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பண பறிமுதல் விவகாரத்தில் அதிமுகவினர் திட்டமிட்டே நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக மேலும் 2 அமமுகவினர் சிக்கினர். ராஜேந்திரன், வீரமுத்து ஆகியோரிடம் இருந்து சுமார் 48 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும்  படையினர் பறிமுதல் செய்தனர். 

இதனிடையே மதுரை சிம்மக்கல்  பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில்  வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து கொண்டிருந்த அதிமுக பிரமுகர் தேவதாஸ் உள்ளிட்ட 4 பேரை பறக்கும் படை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் 20,000  ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாளை காலை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற வருமான வரிச்சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind