ராஜபக்சேவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது - சபாநாயகர் கரு ஜெயசூரியா திட்டவட்டம்

Classic

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூடும் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அண்மையில், இலங்கையில் ஏற்பட்ட உச்சக்கட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கேவின் பிரதமர்  இருக்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே அமர வைக்கப்பட்டார்.

பிரதமர் ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிப்பவரே பிரதமராக தொடர வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படும் என அறிவித்துள்ள அதிபர் சிறிசேனா, இதனை அரசிதழிலிலும் வெளியிட்டு பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார். சிறிசேனாவும், ராஜபக்சேவும் இணைந்து ரணிலுக்கு துரோகம் இழைத்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றன.

முன்னதாக, நாடாளுமன்றத்தை முடக்கிய சிறிசேனா, 10 நாட்களுக்குள் அவை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ராஜபக்சேவிற்கு எதிராக பெரும்பான்மை எம்.பி-க்கள் நிற்கும் போது அவரை பிரதமராக நியமித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரு ஜெயசூரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் தான் பிரதமராக தொடர்வார் என்றும், அதுவரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 7ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவித்திருந்த அதிபர் சிறிசேனா பிறகு அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News Counter: 
100

sasikanth