தேர்தல் தேதியை மாற்றியமைக்க முடியாது..தேர்தல் ஆணையம் பிடிவாதம்..!

share on:
Classic

மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கத் தயார் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் திருவிழா ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளதால், மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் தேதியை மாற்றியமைக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவுக்கான நேரத்தை 2 மணிநேரம் கூடுதலாக அதிகரிக்கத் தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவிழா நடைபெறும் தேதியில் தேர்தல் நடத்தினால், 51 வாக்குப்பதிவு மையங்களிலும் பொதுமக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என கேள்வி எழுப்பினர். விழா பாதிக்கப்படுவதுடன், தேர்தலும் பாதிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இன்றைக்குள் பதில்மனு தாக்கல் செய்யத் தவறினால், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev