ஊடகத்துறையில் மரியாதையான பணியிடம்... காவேரி நியூஸ் டிவி சேனல்..!

share on:
Classic

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காவேரி நியூஸ் டிவி சேனல் தொடங்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கணிசமாகவே இருந்தது. இதற்குக் காரணம் என்னவென்பது மீடியா துறையில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. அது வேறு ஒன்றும் அல்ல, 'நல்ல நிர்வாகத்தின் கையில் செய்தி சேனல் ஒன்று ஏந்தப்பட்டிருக்கின்றது' என்பதே. இதனை மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் என்று சிலர் நினைக்கலாம், அவர்களுக்கான சிறிய நினைவுப்பதிவுகள் சிலவற்றை இப்போது குறிப்பிடுகின்றேன்....

ஊழியத்திற்கு அதிகமான ஊதியம்:

மீடியா மட்டுமல்ல வேறு எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் மாதம் ஒரு முறை மட்டுமே ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஒரு சில நிறுவனங்களில் ஆண்டிற்கு ஒருமுறை போனஸ் போடப்பட்டு ஊழியர்களின் சந்தோஷம் அதிகப்படுத்தப்படும். ஆனால், காவேரி நியூஸ் டிவி சேனல் இந்த விஷயத்தில் புதிய சிந்தனையுடன் செயல்பட்டது. எப்படியென்றால், பணியில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களின் திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாக 10-க்கும் மேற்பட்ட சிறந்த ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 3,000 வரை ஊக்கப்பரிசுத்தொகை அளிக்கப்படும். இந்த நடைமுறையானது கிட்டத்தட்ட 9 மாதங்கள் வரை நீடித்தது. திடீரென எழுந்த சில தவிர்க்க இயலாத காரணங்களால் இந்நடைமுறையானது தற்காலிகமாக தளர்த்திக்கொள்ளப்பட்டது. காவேரி நியூஸ் சேனல் நிர்வாகத்தின் இச்செயல்பாட்டிற்கு ஒட்டுமொத்த மீடியா துறையிலும் ஏகோபித்த கைதட்டல்கள் கிடைத்தன.

 

வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு:

ஊக்கத்தொகை அளித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது மட்டுமல்ல, சிறந்த ஊழியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா செய்ய வைத்து மகிழ்வித்து மகிழ்ந்த ஒரே டிவி சேனலாகவும் காவேரி நியூஸ் திகழ்ந்தது. இதன்படி, சேனலின் தொழில்நுட்பப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆசிரியர் தரத்திலான இன்னொருவர் உட்பட மொத்தம் 2 பேரை ஆசிய நாடுகளுக்கு இன்பச்சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்றது காவேரி நியூஸ் நிர்வாகம். 3 நாட்களுக்கும் மேலான இந்த இன்பச்சுற்றுலாவின் மொத்த செலவையும் (பயணம், உணவு, தங்குமிடம்) நிர்வாகமே முழுமையாக ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த இரண்டு ஊழியர்களின் இன்பச்சுற்றுலாவை இன்னும் இன்பமாக்கும் பொருட்டு குறிப்பிட்ட தொகையையும் மேலதிக செலவுக்காக கொடுத்து வழியனுப்பி வைத்தது காவேரி நியூஸ் நிர்வாகம். 'ஆண்டுக்கு ஒரு முறை' என்ற அடிப்படையில் இந்த அரிய வாய்ப்பானது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

 

சமூக அக்கறை:

சில ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், மனதில் குறை இல்லாமல் பணி செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் படிப்புச்செலவு, மருத்துவச்செலவு, இன்ன பிற செலவுகளையும் காவேரி நியூஸ் நிர்வாகமே முற்றிலுமாக ஏற்றுக்கொண்டது. இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும் படிப்பை தேடி அலைந்துகொண்டிருந்த பல அறிவார்ந்த மாணவர்களின் கற்றல் செலவையும் சிறிதும் தயக்கம் இன்றி ஏற்றுக்கொண்ட நிர்வாகமும் இது தான். 'ஊழியர்களை வளமாக வைத்திருந்தால் சமுதாயமும் செழிப்பாகும்' என்பதை உணர்ந்ததன் பயனாகவே நிர்வாகம் இந்த சமூக அக்கறை எண்ணத்தை மனதில் ஏந்தி பயணித்துக்கொண்டிருந்தது. 

திறமைகளுக்கு மரியாதை:

டிஜிட்டல், வெளியீட்டுப் பிரிவு, உள்ளீட்டுப் பிரிவு, செய்தி வாசிப்பு, தொழில்நுட்பம், ஒளிபரப்பு, கிராஃபிக்ஸ் மற்றும் ஒப்பனை என ஒரு செய்தி சேனலில் பல்வேறு பிரிவுகள் இருக்கும். மேற்கண்ட இந்த அனைத்து பிரிவுகளும் காவேரி நியூஸ் டிவி சேனலிலும் இருந்தது. இப்பிரிவுகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களின் தனித்திறமைகளுக்கும் மதிப்பளித்து அங்கீகாரமளித்த பெருமையும் இந்த நிர்வாகத்திற்கு உண்டு. உதாரணமாக, திரைப்பட இயக்குனராக வர வேண்டும், இசையமைப்பாளராக உருவெடுக்க வேண்டும், பாடகராக மாற வேண்டும், விளையாட்டுத்துறையில் அசத்த வேண்டும், பேச்சாளராக வேண்டும் என பல வகையான இலட்சியங்களை சுமந்துகொண்டிருந்த ஊழியர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஏதுவான பணிச்சூழலுடன் கூடிய உதவியானது காவேரி நியூஸ் சேனல் நிர்வாகத்தின் வாயிலாக செய்து தரப்பட்டிருந்தது.

 

பெண்களுக்கு மரியாதை:

பெண் ஊழியர்களின் திறமைக்கும், ஊழியத்திற்கும் அங்கீகாரம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அந்த குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு பெண் ஊழியர்களும் தனித்தனியாக கௌரவிக்கப்பட்டனர். மேலும், ஒவ்வொரு பெண் ஊழியரின் பணி நிமித்த செயல்பாடுகள், தனிப்பட்ட ஆசைகள் மற்றும் வாழ்க்கை இலட்சியம் போன்றவை உள்ளடங்கிய காணொளிப்பதிவுகளும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு சேனலிலும், யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டு பெண்கள் போற்றப்பட்டனர். இதில் எந்தவித ஏற்றத்தாழ்வு பாகுபாடும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஊழியர்கள் மட்டுமின்றி காவேரி நியூஸ் சேனல் நிர்வாகத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கும் ஒருசேர ஒரே நேரத்தில் மரியாதை மாலை அணிவிக்கப்பட்டது. 

முதலாளியுடனான சந்திப்பு:

ஒரு டிவி சேனலின் முதலாளியை, ஊழியர் ஒருவர் நேரில் சந்தித்து பேசுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், காவேரி நியூஸ் சேனலின் முதலாளியை எப்போது வேண்டுமானாலும், எந்த ஊழியர் வேண்டுமானாலும் நேரில் சந்தித்து பேசலாம். மேலும், எந்நேரமானாலும் அவரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம். ஊழியர்களின் நலனை மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படும் நிர்வாகத்தினருக்கு மட்டுமே இதுபோன்ற தாராள எண்ணம் தோன்றும். அத்தகைய எண்ணமானது காவேரி நியூஸ் நிர்வாகத்திற்கும் இருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த பழக்கமானது அப்போது தொடங்கி இப்போது வரை நிர்வாகத்தினரால் பின்பற்றப்பட்டு வருகின்றது. 

ஊழியர்களின் நலனில் இவ்வளவு அக்கறை காட்டிய காவேரி நியூஸ் சேனல் நிர்வாகமானது தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட நிதி இல்லாமல் நிர்வாகம் தவிக்கின்றது. சேனலின் நிதி நிலைமையை சரிகட்ட கூடிய விரைவில் முதலீட்டாளர்கள் வருவார்கள் என நிர்வாகம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது...

News Counter: 
100
Loading...

Saravanan