பசுமையின் பேரழகு 'மூணார்' பற்றிய சில சுற்றுலா தகவல்கள்....!

share on:
Classic

காணும் இடமெல்லாம் பசுமை, உயர்ந்த மரங்களின் செழுமை, பாரம்பரியத்தில் பழமை என பல அடையாளங்களை தன்னகத்தே கொண்டது தான் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா. 

உயர்ந்த பசுமையான மரங்கள், ஈரம் காயாத சுவர்கள், பார்க்கும் இடமெல்லாம் பச்சை போர்வை போர்த்திய போன்ற ஆறுகள் அதன் மத்தியில் படகு சவாரி என்று மனதை மயங்க செய்யும் கேரளா. வாழ்வில் ஒரு சில நாட்கள் மட்டும் இங்கு வந்து சென்று போனால் கூட இதன் நினைவலைகள் வாழ்நாள் முழுவதும் நம்மை தொடரும். 

இயற்கை அன்னையின் முழு செழிப்பையும் கொள்ளையடித்து தன்னகத்தே வைத்துள்ள கேரளாவின் முக்கிய சுற்றுலா இடம் தான் மூணார். தேயிலை தோட்டங்களின் அரசன் என்றழைக்கப்படும் மூணார் ஒரு சிறந்த சுற்றுலா தளம் என்று சொன்னால் அது மிகையாகது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் மூணார் அமைந்துள்ளது. மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் இது என்பதால் மூணார் என்றழைக்கப்பபடுகிறது.

மிதமான குளிர், ரம்மியமான சூழல், நம்மை தொட்டு செல்லும் மேக கூட்டங்கள் என இதன் அழகை இன்னும் சொல்லி கொண்டே போகலாம். இளையராஜாவின் 'தென்றல் வந்து தீண்டு போது என்ன வண்ணமோ' போன்ற பாடல்களை கேட்டு கொண்டே ஒரு டிரைவ் போனால் போதும் நாம் மூணாரை சென்று விடலாம்.

ராஜமலை, ஆனை முடி மலைமுடி, ரோஸ் கார்டன், மாட்டுப்பட்டி அணை, எக்கோ பாயிண்ட், குண்டலை அணை, லோக்கார்ட் டீ மியூசியம், லோக்கார்ட் டீ பார்க், லோக்கார்ட்  கேப் வியூ பாயிண்ட், கள்ளன் குகை, பெரியகானல் அருவி, ஆணையிரங்கல் அணை, லக்காம் அருவி, வாகுவரை தேயிலை தோட்டம் போன்றவை மூணாரில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும். 

மூணாரில் உற்பத்தியாகும் தேயிலைக்கு உலகமெங்கும் தனி மவுசு உள்ளது என்றே சொல்லலாம். இங்கு உள்ள தேயிலை தொழிற்சாலைகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிப்பது பலருக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது. மூணார் வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது. இங்குள்ள மலைத்தொடர்களில் வரையாடுகள் ஏராளமாக காணப்படுகின்றன. இவை பாறைகள் மீது நடப்பதையை வழக்கமாக கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

தேயிலை வாசம், பசுமையின் சுவாசம், மேகங்களின் மழை சாரல் வீசும் அழகிய மூணார் வருபவர்களின் மனதை மயக்கும் முக்கிய சுற்றுலா தளம் என்று சொன்னால் அது என்றும் மிகையாது.

News Counter: 
100
Loading...

vijay