சாதனையை நோக்கி சந்திரயான்..!

share on:
Classic

நிலவின் 2-ஆம் கட்ட சோதனையை துவங்க உள்ளது சந்திராயன்-2

வளர்ந்த நாடுகள் மட்டுமே, நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், ரஷ்யாவின் கூட்டு முயற்சியுடன், இந்திய ரூபாயில் சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட சந்திராயன் 1 செயற்கைகோள், திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினர் இந்திய விஞ்ஞானிகள். அதன் படி 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி, வெற்றிகரமாக சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இந்திய ஆய்வுக்கருவிகள் மட்டும் இன்றி மற்ற பிற நாடுகளின் ஆய்வுக்கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தது. இந்தியா தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளித்துறையில் உலக நாடுகளின் கவனத்தை பெற்றது.

இதில் பொருத்தப்பட்டிருந்த நாசாவின் எம் 3 எனப்படும் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. நிலவில் சந்திராயனின் பயணம் சுமார் 2 ஆண்டுகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி சந்திராயனுக்கும் பூமிக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பயணித்த 312 நாட்களிலேயே அதன் திட்ட பணிகளில் 90% பணிகளை சந்திரயான் செய்து முடித்ததாக இந்திய விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்தனர். இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நிலவின் மற்ற பகுதிகளை ஆராய்வதற்கான அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட்டனர் இந்திய விஞ்ஞானிகள்.

 

முதலில் ரஸ்யாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்ட நிலையில், ரஸ்யாவால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிலவில் தரையிறங்கும் லேண்டர் கருவியை தயாரிக்க முடியாததால், அந்நாடு இத்திட்டத்தில் இருந்து வெளியேறியது. அதையடுத்து எந்த நாட்டின் உதவியும் இன்றி முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் சந்திராயன் 2 , சுமார் 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

 

சந்திரயான் 2 பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜூலை 15-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன், அறிவித்திருந்த நிலையில் சில தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக நிறுத்தப்பட்ட திட்டம் தொழிநுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு பின்னர் ஜீலை 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளானது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 44 மீட்டர் நீளமான இந்த ராக்கெட்டின் எடை 640 டன்ஆகும்.

 

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த செயற்கைகோளில் ஆர்பிட்டர், விக்ரம், பிரக்யான் என 3 முக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ரோவர், விக்ரம் ஆகிய இரு கருவிகளும் மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ்ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமவெளி பகுதியில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

எதிர்கால ஆற்றல் மூலங்கள், குடியேற்றம், நீராதாரம் போன்றவை குறித்தான முக்கிய தகவல்களை, நிலவின் தென்துருவ பகுதியில் இருந்து பிரக்யான் சேகரிக்க உள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், விக்ரமிற்கு அனுப்பப்பட்டு அதிலிருந்து தரைதளத்திற்கு கிடைக்கபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் அனைத்துமே நிலவின் தென்துருவத்தில் நடைபெற உள்ளது. 

 

News Counter: 
100
Loading...

Saravanan