நகைச்சுவையின் மறு பெயர் சார்லி சாப்ளின்...!

Classic

‘சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்கள்தான்’ என்பதை உணர்ந்து, தான் சிரிக்காவிட்டாலும், தன் மூலம் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர் தான் பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். 

உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

 

சிறிய வயதில் கண்ட துன்பங்கள் :

குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

‘சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்கள்தான்’ என்பதை உணர்ந்து, தான் சிரிக்காவிட்டாலும், தன் மூலம் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர் தான் பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்.

 

சார்லியின் திருமணம் வாழ்க்கை :

14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர். அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது

.

1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு  அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின். 

‘உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது’ - சாப்ளின்.

முதல் படம்:

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான 'தி கிட்' 1921ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார். அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார்.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார்.

‘நிலைக் கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்குச் சிரிக்கத் தெரியாது’ - சாப்ளின்.

சார்லியின் சாதனை: 

1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

‘உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது’- சாப்ளின்.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

'இடுக்கண் வருங்கால் நகுக'  என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளினைப்போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும்  என்பதுதான் சார்லி சாப்ளின் சொல்லும் உண்மை.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்" என்று கூறுகிறார் சாப்ளின்.அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார்.
 

News Counter: 
100
Loading...

aravind