சென்னைக்கு வழங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் நச்சு : புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ராமதாஸ் எச்சரிக்கை

share on:
Classic

சென்னைக்கு வழங்கும் குடிநீரில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மையாக விளங்கும் புழல் ஏரியில் உள்ள தண்ணீரில், ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுகள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பை உடனடியாக தடுக்காவிட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அண்ணா பல்கலைக்கழகப் பேராசியர்கள் புழல் ஏரியின் அடிப்பகுதியில் படிந்திருக்கும் படிமங்களில் இருந்து 32 மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலந்த குடிநீரை அப்படியே குடிப்பதால் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாலும் சென்னையில் குடிநீரால் பரவும் நோய்களை தடுப்பதற்காக 90% மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கின்றனர். தண்ணீரை காய்ச்சும் போது, 100 டிகிரி வெப்பநிலையில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் உருகி டையாக்சின் என்ற நச்சு உருவாகிறது. 

டையாக்சின் நச்சுப்பொருள் நமது உடலுக்குள் செல்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு எளிதாக தொற்றுநோய்கள் தாக்கும் பாதிப்பு ஏற்படும். வளர்ச்சிக் குறைபாடு, மலட்டுத்தன்மை ஆகியவற்றுடன் புற்று நோய் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியின் மூலம் இப்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இதன் பாதிப்புக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவது அவசியமாகிறது. எனவே ஏரிகளில் மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு, நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றுவதற்கான தொழில்நுட்பம் கண்டுப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை அண்ணாப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புக்களுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Ramya