சாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றது இந்திய அணி

share on:
Classic

லண்டனில் நடைபெற்ற சாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றது இந்திய அணி. அணியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

புறக்கணிக்கப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திமிறி எழுந்து தங்களின் திறமையின் மூலம் உலகத்தை திரும்பிப்பார்க்கச் செய்வார்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள் சென்னையைச் சேர்ந்த நம் பிள்ளைகள். இடம் எதுவாயினும் திறமை ஒன்றே என்பதை பறைசாற்றும் வகையில் லண்டனில் சமீபத்தில் நடைப்பெற்ற சர்வதேச சாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.

பல வசதிகள் இருந்தும் தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கி கிடக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு மத்தியில், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் சாலையோரத்தில் குடியிருக்கும் இந்த மொட்டுகள். 

கருணாலையா என்னும் தொண்டு நிறுவனத்தின் உதவியைக்கொண்டு கடல் தாண்டி சென்ற தெருவோரம் வசிக்கும் மாணவர்கள் இன்று கோப்பையுடன் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்ற பால்ராஜ், சூர்யா என்ற மாணவர்களும், மோனிஷா, நாகலக்ஷ்மி என்ற மாணவிகளும் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளனர். 

இங்கிலாந்திற்கு சென்று அந்நாட்டு அணியையே தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியுள்ளனர் என்றால் இவர்களின் திறமை அபாரம்தான். விளையாட்டில் வெற்றி பெற்ற இந்த பிஞ்சு உள்ளங்க்களின் எதிர்ப்பார்ப்பு மாலை மரியாதையோ, மாட மாளிகையோ இல்லை. இவர்கள் தமிழக அரசிடம் வைத்துள்ளது ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே. காசு பணம் வேண்டாம், எங்களுக்கான சுதந்திரமும், கழிவறை வசதியும் போதும் என்கின்றனர். 

இந்த மாணவர்கள் தங்களுக்கான அடிப்படை உரிமையை பரிசாக கேட்கும் அவலம் கேட்பவர் அனைவரையும் கலங்க வைக்கத்தான் செய்கிறது. சாலையோரத்தில் வசிப்பவர்கள் தப்பானவர்களாகத்தான் இருபார்கள் என்ற கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்துள்ளது வளர்ந்துவரும் இந்த கார்ப்பரேட் 'நாகரீகம்'. இந்த மனப்போக்கு உயிர்ப்புடன் உள்ளவரை சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஏது பாதுகாப்பு? குற்றவாளி கிடைக்காமல் போனால் முதலில் கைது செய்யப்படுவது எங்களில் ஒருவர்தான். எங்களையும் சக உயிராக மதியுங்கள் என்ற இந்த சிறுவனின் குமுறலுக்கு செவி சாய்க்குமா இந்த பொதுச்சமூகம்?

திறமையை மட்டுமே வைத்து கடல் தாண்டி வெற்றிக் கோப்பையை தட்டி வந்த இவர்களைப் போல் இன்னும் பல சாதனையாளர்கள் சரியான வாய்ப்பும் பண உதவியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்கிறார் கருணாலையாவின் நிறுவனர் பவுல் சுந்தர் ராஜ்.

பல தடைகளைத் தாண்டி தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர்களுக்கு உதவி செய்ய இதுவரை யாரும் முன்வராத நிலையில் அரசாங்கமாவது தங்களுக்கு உதவ முன்வருமா என்று ஏக்கத்துடன் கேள்விகளை முன்வைக்கின்றன இந்த சிறுவர்கள்... இவர்களுக்கு ஏதேனும் தனியார் நிறுவனங்கள் உதவ முன்வரும் வரை அரசு அமைதி காக்கப்போகிறதா? குறைந்த பட்சம் அரசு தரப்பில் இருந்து ஒரு வாழ்த்தாவது தெரிவிக்கலாம்... அரசு இனியாவது அவர்களுக்கு விரைந்து உதவிக்கரம் நீட்டும் என்ற நம்பிக்கையுடன்..

 

News Counter: 
100
Loading...

aravind