வறுமையின் வலி... கல்லூரி மாணவி தற்கொலை

share on:
Classic

சென்னையில், 'ரேடியாலஜி' பயிலும் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணி. இவர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் 'ரேடியாலஜி' படித்து வந்தார்.  வேளச்சேரி விஜயநகர் 3-வது பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், வீட்டின் அறையில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து வேளச்சேரி போலீசார் தமிழ்வாணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து 12 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

அந்த கடிதத்தில், சிறு வயதிலேயே தமிழ்வாணியின் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் 3 மகள்களை வைத்துக்கொண்டு தனது தாய் மிகவும் கஷ்டப்படுவதாகவும், மூன்றாம் ஆண்டு படிக்கும் தன்னால் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றும், மிகுந்த மன உளைச்சலால் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 'மரணத்தில் சந்தேகம்' என வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார் மாணவியின் மரணத்தில் வேறு காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

mayakumar