
சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரிய வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பத்திரிக்கை செய்திகளை பார்க்கும் போது சின்னதம்பி யானை கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லை என்றும், அதே சமயம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தும், சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுவதாக தலைமை வன பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவாத்சவா தெரிவித்தார். அஜய் தேசாஜி அறிக்கையின் படி, சின்னதம்பியை காட்டுக்கு அனுப்ப முடியாது என்றும், முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் வனத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.