காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு : கர்நாடகாவில் தொடரும் பதற்றம்..

share on:
Classic

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவக்குமார் அமலாக்குத்துறையால் கைது செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நீடிக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு சிவக்குமாரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.8.6 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தின் மதிப்பு ரூ. 11 கோடியாக திருத்தப்பட்டது. மேலும் ஹவாலா மூலம் சிவக்குமார் கணக்கில் வராத பணத்தை பறிமாற்றம் செய்வதாகவும் வருமான வரித்துறையினர் குற்றம்சாட்டினர். வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சிவக்குமார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த புகார் தொடர்பாக கடந்த 4 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி நேற்று அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் சிவக்குமாரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் இன்று மாநில அளவிலான பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் 4 அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் நடைபெறும் போராட்டகள் காரணமாக பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளன. 

முன்னாள் அமைச்சரான சிவக்குமாரின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. அரசின் தவறான கொள்கைகள் மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றிலிருந்து மக்களை திருப்பும் மற்றொரு முயற்சியே சிவக்குமாரின் கைது எனவும் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பாவின் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ள பகுதிகளை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Ramya