கடும் சர்ச்சைகளை கிளப்பிய 'ஆர்ட்டிகிள் 15' திரைப்படம்..!

share on:
Classic

கடந்த மாதம் வெளியான ஆர்ட்டிகிள் 15 என்ற இந்திப் படம் கடும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் 28ம் நாள் இந்தியா முழுவதும் வெளியான ஆர்ட்டிகிள் 15 திரைப்படம், இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி குறித்து கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருக்கிறது. இதனால் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள அனுபவ் சின்ஹா இப்படம் எந்தக் குறிப்பிட்ட சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்று மறுத்துள்ள போதிலும் எதிர்ப்பு அடங்கவில்லை. 2014ஆம் ஆண்டு  நிகழ்ந்த பத்வான் கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் 2016ஆண்டு நடைபெற்ற உனா போராட்டம் ஆகிய நிகழ்வுகளால் உந்தப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக, மூன்று தலித் பெண் குழந்தைகள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார். 

படத்தில் இடம்பெற்றுள்ள உரையாடல்கள் சாதிய ஒடுக்குமுறைகளை கடுமையாக சாடுகின்றன. இந்திய சாதிய சமூகத்தின் உண்மை நிலையை முகத்தில் அறைந்தாற்போல் ஆர்ட்டிக்கிள் 15 சொல்கிறது. அரசு, சட்டம், சாதி, மதம், கூலி உயர்வு ஆகியவை குறித்து பேசும் இந்தப் படத்திற்கு தற்போது சிக்கல் உருவாகி உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களை இந்தப்படம் தவறாக சித்தரிப்பதாக படத்தை எதிர்க்கிறார்கள். இந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட சென்சார் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஒரு புறம் எதிர்ப்பும் சர்ச்சைகளும் கிளம்பினாலும் மறுபுறம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் நல்ல வசூலையையும் பெற்று வருகிறது ஆர்ட்டிகிள் 15.

News Counter: 
100
Loading...

vinoth