ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..?

share on:
Classic

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக,  அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. ஆனால் இந்த சான்றிதழை பெறுவதற்காக  ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க துவங்கியது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. நடத்திய சோதனைகளில்  கார்த்திக் சிதம்பரம் சட்ட விரோதமாக பெற்ற, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான வவுச்சர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை 2008-ஆம் ஆண்டு  கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக நடந்த முதல்கட்ட விசாரணையில்  கார்த்தி சிதம்பரம், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் ஐஎன்எஸ் மீடியா விவகாரம் தொடர்பாக 2008-ஆம் ஆண்டு மே மாதம் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதே வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கு தொடர்பாக பலகட்ட விசாரணைகள்  நடந்த வந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு முன்னனி நாளிதழ் ஒன்று கார்த்தி சிதம்பரம் பல நாடுகளில் பல நிறுவனங்களை நடத்திவருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இதன் பிறகு, பல்வேறு நாளிதழ்களில் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவர துவங்கின. இந்த வழக்கு தொடர்பாக,  2015ஆம் ஆண்டின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஒரு கண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தினர். 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை முடக்கினர்.

இதன் தொடர்ச்சியாக  கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய அட்வான்டேஜ் குளோபல் கன்சல்டிங், செஸ் ஆகிய நிறுவனங்களிலும்  2016-ம் ஆண்டு  மே மாதம் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனிடையே கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியபோது, கடந்த  2018-ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடர்பாக சென்னையில் முதல் முறையாக  சிபிஐ தரப்பால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது,  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.15 லட்சத்தை பிணயத்தொகையாக செலுத்தவும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து அவர் பலமுறை வெளிநாடு செல்ல அனுமதி கோரியும் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்து வந்தது.

இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி  டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கூறியிருந்தார், இறுதியாக இது தொடர்பாக அவர் செய்த மேல் முறையீட்டின் போதும், பல லட்ச மக்கள் உங்களை நம்பி வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். வெளிநாட்டிற்கு செல்ல்லும் எண்ணத்தை விடுத்து,  அவர்களுக்கு நன்மை பயக்கும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என நீதிமன்றம்  அறிவுரை வழங்கி அனுப்பியது.

இத்தகைய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி, முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம்  பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் விசாரணையின் முடிவில், முன் ஜாமீன் வழங்க மறுத்து சிதம்பரத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் ப.சிதம்பரம் தரப்பிற்கு இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Saravanan