பக்தியா? வாக்கா? குழப்பத்தில் மதுரை மக்கள்..!!

share on:
Classic

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர் திருவிழாவும், மக்களவை தேர்தல் தேதியும் ஒரே நாளில் வருவதால் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

மதுரையில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் திருவிழாவில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். அந்த அளவுக்கு வெகு விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா, வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் இவ்விழா நடைபெறும். இந்நிலையில், அதேதேதியில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலை தள்ளிவைக்கக் கோரி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

வாக்குப் பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரையை பொருத்தவரை, 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 77.48 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, 2014-ல் 67.88 சதவீதமாக குறைந்தது. இதனால், 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகப்படுத்தவதற்கு, பால்பாக்கெட்டின் மூலம் வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் நேரடி கோரிக்கைகளை பரிசீலிக்குமா? என்ற சந்தேகமும், கேள்வியும் பொதுமக்களிடம் எழாமல் இல்லை.

மதுரை சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், திருவிழா நடக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், ரோந்து படையினர் செல்வதற்கு சிரமம் ஏற்படும். இதை ஒப்புக் கொள்ளும் விதமாக மதுரை மாவட்ட ஆட்சியர் 12,000 போலீஸார் பாதுகாப்புக்கு போதாது எனக் கூறி, மேலும் 3,700 போலீஸார்களை பாதுகாப்புக்கு கோரியுள்ளார். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகளின்படி பொதுமக்கள் யாரும் தங்களது மாவட்டங்களை தவிர வெளி மாவட்டங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை. எனவே திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களது குடும்பங்களோடு எங்கு தங்குவார்கள் என்ற கேள்வியும், அவர்களது உடமைகளுக்கான பாதுகாப்பு குறித்த அச்சங்களும் எழாமல் இல்லை.

எனவே, பொதுமக்களாகிய வாக்காளர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்தால் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சதவீதத்தில் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan