”பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்..!

share on:
Classic

காங்கிரஸ், தெலுங்கு தேசம் மட்டுமின்றி பாஜகவுடனும் திமுக பேச்சுவார்தை நடத்தி வருவதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை நிரூபிக்கத் தயாரா என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கைக்காட்டிய ஸ்டாலின், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசியதை பாஜக, அதிமுக கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், பாஜகவுக்கும் திமுக தூது அனுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து உண்மை தான் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்புக்கு பின்னரும் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் ஏன் கூறவில்லை என தமிழிசை கேள்வி எழுப்பினார். 

இதனிடையே, 3-வது அணி அமைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

4 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் திமுக-குறித்து குழப்பதை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 

இதனிடையே இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவதை நிரூபிக்கத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி, தமிழிசையோ நிரூபித்தால், தான் அரசியலில் இருந்தே விலகத் தயார் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் நிரூபிக்கத் தவறினால், பிரதமர் மோடியும், தமிழிசையும் அரசியலில் இருந்து விலகத் தயாரா எனவும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind