இனவெறியை தூண்டும் விதமாக கருத்து..மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்..!

share on:
Classic

உலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றாக திகழும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. முன்னாள் அதிபர் ஓபாமா மீது இனவெறி கருத்துக்களை தெளித்த டிரம்ப், தற்போது 4 பெண் எம்.பி.க்களைச் சாடி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வளரும் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் அதற்கு நடுவராக இருந்து செயல்பட்டு வரும் ஆதிக்க நாடான அமெரிக்கா, சொந்த நாட்டு மக்கள் மீது இனவெறியை தூண்டும் விதமாக கடுமையாக நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நாட்டின் குடியேற்றக் கொள்கையில் கடுமையாக நடந்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமெரிக்க பெண் எம்.பிக்கள் ரஷீதா தலீப், ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் உமர் ஆகியோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர். 

பெண் எம்பிக்களின் எதிர்ப்பால் அதிருப்தியடைந்த அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இனவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது பதிவில் அமெரிக்காவை விரும்பாதவர்கள் அவர்களின் பூர்வீக நாட்டிற்குத் திரும்பி அங்குள்ள குற்றங்களை குறைத்து, ஊழலை ஒழித்துவிட்டு இங்கு வரட்டும் என மறைமுகமாக பெண் எம்பிக்களை சாடியுள்ளார். சர்வதேச அரசியலில் டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. 

டிரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டேர்ன், இனவெறி ரீதியான கருத்து வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே டிரம்பின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என விமர்சித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தனது கருத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்த அதிபர் டிரம்ப்,  அமெரிக்காவை வெறுப்பவர்கள் தாரளமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என மீண்டும் பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இனவெறி பிரச்சனையை வீரியம் அடையச் செய்துள்ளது. மோசமான ஆட்சி நடத்தி வரும் டிரம்ப் மக்களை திசை திருப்பவே இனவெறியை தூண்டும் விதமாக பேசி வருவதாக 4 பெண் எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind