பிரியங்கா காந்தி தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும் : மீண்டும் வாரிசு அரசியல்..?

share on:
Classic

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ராகுல் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், புதிய தலைவராக பிரியங்காவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வெளிப்படையாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. 

மக்களவைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த மே 25-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார். அவரின் முடிவை கமிட்டி ஏற்காத நிலையில், அவரின் முடிவை மாற்றும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். எனினும் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்த ராகுல், தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தலைமையிடம் வழங்கிவிட்டதாகவும், விரைவில் புதிய தலைவரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அண்மையில் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக் ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது ராகுல் காந்திக்கு மாற்று பிரியங்கா காந்தி தான் என்று சில தலைவர்கள் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். 

இதுகுறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெயிஸ்வால் “ காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் பிரியங்கா காந்தியின் பெயரை கூறி வருகின்றனர். நானும் கூட பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று நம்புகிறேன். அவர் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர், அவரிடம் கட்சியை வழிநடத்தும் திறமை உள்ளது. அவர் சக்திவாய்ந்த தலைவர்” என்று தெரிவித்தார்.

இதேபோல் 3 முறை எம்.பியாக இருந்த பக்த சரண் தாஸ் பேசிய போது “ ராகுல் காந்தி பதவியில் இல்லாத சூழலில் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டனிலிருந்து மூத்த தலைவர்கள் வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுப்பார்கள். உள்ளபடியே அவர்கள் தற்போது கோரிக்கையை வைத்து வருகிறார்கள். ஆனால் அது சரியான இடத்திற்கு செல்லவில்லை. ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ளாத பட்சத்தில், பிரியங்கா தான் அடுத்த தலைவராக வேண்டும், கட்சி அவரின் பெயரை முன்மொழிய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே இந்த நடைபெற உள்ள காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கட்சியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த முறையாவது நேரு குடும்பத்தை சேராதோர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க கூடும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது மீண்டும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக பிரியங்கா காந்தியின் பெயரை வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். 

வாரிசு அரசியலில் இருந்து வெளிவர காங்கிரஸ் கட்சியே நினைத்தால் கூட, அக்கட்சி தொண்டர்கள் அதற்கு அனுமதி அளிக்கமாட்டார்கள் என்பது தற்போது தெளிவாகி உள்ளது. விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், அக்கட்சி யாரை தேர்ந்தெடுக்க போகிறது என்பதை பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
 

News Counter: 
100
Loading...

Ramya