12,915 தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்..? தேர்தல் ஆணையம் விளக்கம்...

share on:
Classic

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட 12,915 தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4.35 லட்சம் பேருக்கு தபால் வாக்கு அளிக்க படிவங்கள் வழங்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், முறையாக படிவங்கள் நிரப்பாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதையடுத்து, தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வருங்காலத்தில் தபால் ஓட்டுக்கள் பதிவில் இது போன்ற குழப்பங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan