வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..?

share on:
Classic

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்..? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மிகச் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒரு தொகுதிக்கான மையத்தில் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இங்கு வாக்கு எண்ணும் அலுவலரும், வேட்பாளரின் முகவர்களும் அமர்ந்திருப்பர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணிக்கையை தொடங்கும் முன்பு, வாக்குப்பதிவு எந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் எண், அவை முறையாக சீல் வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறதா என்பது குறித்தும் வேட்பாளர்களின் முகவர்களிடம் காட்டிய பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் எந்த வேட்பாளர் எவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதிகபட்சமாக ஒரு சுற்று முடிய 30 நிமிடங்கள் வரை ஆகலாம். வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதிலுள்ள பேட்டரி மாற்றப்படும். அதன்பிறகும் பிரச்சினை இருந்தால் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அனைத்து சுற்றுகளும் எண்ணி முடித்த பின்னர், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 வாக்குச் சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் அனைத்தும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 6 சட்டமன்றத் தொகுதி இருப்பதால், 30 விவிபேட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். மின்னணு எந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு எண்ணிக்கை முடிவுகள் ஒப்பிட்டு பார்க்கப்படும், சிறிய வித்தியாசம் இருந்தால் ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையில் வேகத்தை விட விவேகம் தான் முக்கியம் என்றும், முடிவுகளை விரைவாக அறிவிப்பதை விட, துல்லியமாகவும், சரியாகவும் முடிவுகள் இருக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையால் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகளின் முடிவுகள் வெளிவர நள்ளிரவு ஆகலாம் என கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மாலையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan