புவிசார் குறியீடு அடையாளத்தை பெற்ற “ஈரோடு மஞ்சள்” !!

share on:
Classic

கடந்த 10 ஆண்டுகளாக மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அடையாளத்தை வழங்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, பவானி, கோபிச்செட்டி பாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய இடங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் மஞ்சளுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே இந்த மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்குகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது புவிசார் குறியீட்டின் வகைப்படுத்துதல் பட்டியலில் மசாலா பிரிவில் வகுப்பு 30ன் கீழ் மஞ்சளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டதற்கும், அதன் தரத்தை காப்பதற்குமான சான்றாகும்.

மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, மகாபலிபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஆரணிப்பட்டு, சேலம் பட்டு, தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya