வீர மங்கை வேலு நாச்சியார் !

Classic

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி... ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை.

மகாராணி வேலு நாச்சியார்.

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள 'சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். அரண்மனையில் ஆண் வாரிசு இல்லாத குறை இல்லாமல் வீர விளையாட்டுகளான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்று அவர் ஒரு சிறந்த வீரமங்கையாக உருவாக்கப்பட்டார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 

முத்து வடுகநாதத் தேவர் மரணம்.

முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும், அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.

சுல்தான் ஹைதர் அலியின் உதவியை நாடுதல்.

பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச் சென்றார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் அவர்கள் மிகப் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தகுந்த வசதிகளைச் செய்து கொடுத்தார். தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார்.

தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார்.படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை 'சிவகங்கை பிரிவு”, 'திருப்புத்தூர் பிரிவு”, 'காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத் தாக்குதல் நடத்தினர்.

சிவகங்கை நகரைக் கைப்பற்றி போரில் வெற்றி.

இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.  

கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார் வீரம் என்றும் போற்றுதலுக்குரியதே.

News Counter: 
100
Loading...

youtube