5 ஆண்டுகளில் பிரதமரின் முதல் செய்தியாளர் சந்திப்பு : அமித்ஷாவே பதிலளிப்பார் என்று கூறிய மோடி..!!

share on:
Classic

கடந்த 5 ஆண்டு பதவிக்காலத்தில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல், அமித்ஷா பதிலளிப்பார் என்று கூறிவிட்டார். 

மக்களவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பாஜக தலைவர் அமித்ஷாவும் உடனிருந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மோடி “ மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும். முழு பெரும்பான்மையுடன் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது நாட்டில் அடிக்கடி நடைபெறாத நிகழ்வு ” என்று தெரிவித்தார். 

மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் பிரதானமான விமர்சனமாக இருந்தது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் மோடி ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பாஜக தலைவர் என்ற முறையில் அமித்ஷா பதிலளிப்பார் என்று மோடி கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அமித்ஷா “ எல்லா கேள்விகளுக்கும் பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தன்னுடைய கேள்வி மோடிக்கானது என்று செய்தியாளர் கூறிய பிறகும் அமித்ஷாவே பதிலளித்தார். தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மூன்றாவது அணி குறித்த கேள்வி தான் அது. தாங்கள் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி என்று ஷா தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya