தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை 

Classic

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. அந்த வழக்கு கடந்துவந்த பாதையை தற்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆகஸ்ட் 24 -ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அரசுக் கொறடா ரஜேந்திரன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து 19 எம்.எல்.ஏக்களும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

செப்டம்பர் 5-ம் தேதி ஆஜரான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் நோட்டீசுக்கு பதில் அளிக்க 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கோரினர். இருப்பினும் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து ஜக்கையன் விலகியதையடுத்து, செப்டம்பர் 18-ம் தேதி மீதமுள்ள தங்க தமிழ்ச்செல்வன், ஆர்.முருகன்,மாரியப்பன் கென்னடி ,
கதிர்காமு ,ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன் ,செந்தில் பாலாஜி, எஸ். முத்தையா ,வெற்றிவேல் ,என்.ஜி.பார்த்திபன் ,தண்டபாணி ,

ஏழுமலை ,ரெங்கசாமி ,தங்கதுரை,ஆர்.பாலசுப்பிரமணி எஸ்.ஜி.சுப்ரமணியன் ,ஆர்.சுந்தர்ராஜ் மற்றும் கே.உமா மகேஸ்வரி ஆகிய 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம் செய்யபட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென செப்டம்பர் 19 -ம் தேதி தினகரன் அணி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்க கூடாது என்றும், தேர்தல் தொடர்பாக  எந்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் இடைகால உத்தரவு. 

அக்டோபர் 4-ம் தேதி 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும், சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரமும் வாதிட்டனர்.

இதனையடுத்து, டிசம்பர் 19-ம் தேதி கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி  வாதிட்டார்.

கட்சி தாவல் தடை சட்டத்தை பொறுத்தவரை தகுதி நீக்கம் செய்யும்  அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது என ,முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஜனவரி 09ஆம் தேதி ஆஜராகி வாதிட்டார்.

ஜனவரி 12-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, ஜனவரி 23-ம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று  பிற்பகல் 1 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100

sankaravadivu