அர்ஜெண்டினாவில் இன்று ஜி20 மாநாடு.. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு..

share on:
Classic

அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் இன்று  தொடங்கி நாளை நிறைவுபெறுகிறது. வேளாண்துறை சீர்திருத்தம், வர்த்தகம், சூழலியல் மாற்றம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.  இந்த மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர் மோடி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசினார். தலைநகர் பியூனஸ்   ஏரெஸில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஜி20 மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. இதன்பின், ஐ.நா பொதுச்செயலாளர் அண்ட்டோனியோ கட்டரெரெஸை சந்தித்த மோடி, உலக வெப்பமயமாதல் மற்றும் பருவகால மாற்றம் குறித்து கலந்தாலோசித்தார்.

இதனிடையே, பியூனஸ் ஏரெஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்

News Counter: 
100
Loading...

sasikanth