அமெரிக்க முன்னாள் அதிபரின் மறைவிற்காக கண்ணீர் சிந்தும் நாய்...!

share on:
Classic

மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புஷ்ஷின் மறைவிற்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது வளர்ப்பு நாய் ’சல்லி’ கண்ணீர் கடலில் தத்தளிக்கின்றது. 

இளமைப்பருவம்:
1924ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று, அமெரிக்காவின் மஸசூஸெட்ஸ் மாகாணத்தில் பிறந்தார் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். பிரபல யேல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது பேஸ்பால் அணியில் விளையாடிய புஷ்,  2 முறை உலக கல்லூரித் தொடர்களில் களமிறங்கி கலக்கியிருந்தார். பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்ததும் அமெரிக்க கடற்படையில் இணைந்தார்.  1943ல்  'கடற்படையில் மிகவும் வயது குறைந்த விமானி' என்ற மாபெரும் பெருமை புஷ்ஷின் வசம் இருந்தது.  மேலும், இரண்டாம் உலகப்போரின் போது 58 போர்க்களங்களில் அமெரிக்காவிற்காக களமிறங்கிய புஷ், ஆகச்சிறந்த விமானி என்ற பெயரையும் பெற்றிருந்தார். இந்த அசத்தல் சாதனைக்காக நாட்டின் உயரிய ’ஏர்’ பதக்கங்களை 3 முறை வென்றிருந்தார். 

அதிபராக புஷ்:
ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது புஷ் துணை அதிபராக பதவி வகித்திருந்தார். அப்போது, ரீகன் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, 8 மணி நேரம் மட்டும் அதிபராக செயல்பட்டார் புஷ். இது தான் அவர் அதிபர் இருக்கையில் அமர்ந்த முதல் தருணம். தமது ரகசிய அதிகாரியின் பிஞ்சு மகனுக்கு லுக்கீமியா இருந்ததை அடுத்து தன்னுடைய தலையையும் மொட்டையடித்துக் கொண்டார். இது அந்த பிஞ்சுக்கு அவர் அளிக்கும் மரியாதையாக கருதப்பட்டது.  கடந்த 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 41வது அதிபராக பதவியேற்ற புஷ் 1993ஆம் ஆண்டு வரை செம்மையான ஆட்சியை வழங்கினார். இவரது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இன்றளவும் கருதப்படுகிறது. வாக்கர் புஷ்ஷின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த அவரது மனைவி பார்பரா அண்மையில் தான் காலமானார்.  தமது கணவர் மற்றும்  மகன் இருவரும் அமெரிக்க அதிபராக பதவியேற்றதைக் கண்டு ரசித்த ஒரே பெண் என்ற பெருமை பார்பராவின் வசம் உள்ளது. 

பிடித்ததும் பிடிக்காததும்:
1999-ல் தன்னுடைய 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ’ஸ்கை டைவிங்’ செய்து அசத்தியிருந்தார் புஷ். இதன்பின் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறையும், அடுத்த 5 ஆண்டுகள் கழித்து இன்னொரு முறையும் என தமது 85-வது பிறந்தநாளன்றும் ஸ்கை டைவிங் சாகசம் செய்து மெய்சிலிர்க்க வைத்தார். இது போதாதென்று தன்னுடைய 90-வது பிறந்தநாளையும் ஸ்கை டைவிங் செய்து கொண்டாடிய புஷ் மொத்தம் 4 முறை தன் தைரியத்தை உலகிற்கு நிரூபித்துள்ளார். 

பிரக்கோலி காய்கறியைக் கண்டாலே தெறிந்து ஓடும் புஷ், அமெரிக்க விமானப்படை அதிகாரிகளின் உணவுப்பட்டியலில் இருந்தும் அதை நீக்கினார். பிரக்கோலியைக் கண்டாலே தமக்கு அலர்ஜி என நேர்காணல்களில்  இவர் பலமுறை கூறியிருக்கின்றார். 

புஷ்ஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்பிரிங்கர் ஸ்பானியல் இன நாய் வெள்ளை மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்தது. ’மில்லீ’ என பெயரிடப்பட்டிருந்த இந்த செல்லக்குட்டிக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையைத்தான் முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி நான்ஸி ரீகன் பியூட்டி பார்லராக பயன்படுத்தி வந்தார். 

சீனியருக்கு பெருமை சேர்த்த ஜூனியர்:
புஷ்ஷின் மகனான ஜார்ஜ்  வாக்கர் புஷ் கடந்த 2000-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்று, தமது தந்தை விட்டுச் சென்ற பணியை செம்மையாக தொடர்ந்தார். அமெரிக்காவின் 43-வது அதிபரான ஜூனியர் புஷ், 2 முறை நாட்டை ஆட்சி செய்து அவரது தந்தையின் நற்பெயருக்கு மேலும் வலு சேர்த்தார். அமெரிக்க அதிபரின் தந்தையாக இருந்த 2-வது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தான். இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பவர் ஜான் ஆடம்ஸ். 

புஷ் மறைவு:
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஹெர்பர்ட் வாக்கர் புஷ் கடந்தாண்டு முதல் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவரை ’பார்க்கின்ஸன்’ நோயும் தாக்கியதால் சக்கர நாற்காலியைக் கொண்டு தமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்.  94 வயதிலும் மதிப்பு குறையாத முன்னாள் அதிபராக திகழ்ந்த புஷ், உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளியன்று காலமானார். எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களே விரும்பும் அளவிற்கு நற்குணம் கொண்டவர் இவர் என்பது இந்த அரசியல் ஆளுமைக்கு மட்டுமே வாய்த்த தனிச்சிறப்பு.

மனிதர்களும் மாக்களும் அஞ்சலி:
புஷ்ஷின் மறைவுக்கு அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடி உட்பட  உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கும், புஷ்ஷுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருந்தது. இருந்தாலும், பழைய கசப்பான சம்பவங்களை மறந்த டிரம்ப், புஷ்ஷின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டார். 

புஷ்ஷிற்கு மனிதர்கள் மட்டுமின்றி செல்லப்பிராணிகளும் கண்ணீர் அஞ்சலி செலுத்தத் தவறவில்லை. புஷ்ஷின் வளர்ப்பு நாயான சல்லி, அவரது பூதவுடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் அருகிலேயே படுத்துக்கொண்டு கண்ணீர் சிந்தியது. நாள் முழுவதும் சோறு, தண்ணீர் உட்கொள்ளாத சல்லி கண்ணீர் கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

admin