பொதுத்தேர்தலின் இறுதியில் விவாதப் பொருளான "கோட்சே " : இந்திய அளவில் சர்ச்சையானது எப்படி..?

share on:
Classic

இந்தியாவின் பொதுத் தேர்தல் முடியும் நேரத்தில் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தேசிய அளவிலான விவாதப் பொருளாக மாறியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மே 12 : 

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ என்னுடைய ஹேராம் படத்தை பார்த்தால் தெரிந்திருக்கும். இன்று நடக்கவிருக்கும் பயங்கரங்கள் எல்லாம் நடக்குமோ என்ற பயம் தான் அந்த படத்தில் நான் சொல்ல முற்பட்டிருக்கும் சேதி. நான் என் தேசிய கொடியை மதிக்கிறேன். அதில் உள்ள 3 வண்ணமும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வர்ணம் கொடியை நிரப்பக்கூடாது அது என்ன வர்ணமாக இருந்தாலும் சரி. முஸ்லீம்கள் நிறைய பேர் இருப்பதனால் நான் இதனை சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்னால் நான் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று நினைத்து கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் மார்தட்டி சொல்வேன் ” என்று கூறினார்.

மே 13 : 

கமல்ஹாசனின் கருத்து தேசிய அளவில் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளானது. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற அவர் இவ்வாறு பேசி வருவதாகவும், மக்கள் நீதி மய்யத்தை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் தமிழக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தார். எதிர்ப்பின் உச்சமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் கொளுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று மிகக்கடுமையாக விமர்சித்தார். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த கருத்துக்கும் கண்டனங்கள் வலுக்க ஆரம்பித்தன.

மே 14 :  

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியது. இதனைத்தொடர்ந்து அரவக்குறிச்சியில் கமல்ஹாசனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

மே 15 : 

அஷ்வின் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதனையடுத்து கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்தார்.

மே 16 : 

பாஜக வேட்பாளர் சாத்வி பிராக்யா இந்த சர்ச்சையை மேலும் அதிகரிக்கும் விதமாக கருத்து தெரிவித்தார். கோட்சே ஒரு தேசபக்தர் எனவும், அவர் ஒரு தியாகி என்றும் கூறினார். உடனடியாக பிரக்யா மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக தெரிவித்தது. பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பிரக்யாவை தண்டிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது. அதேநேரத்தில் இங்கு கமல்ஹாசனின் பிராச்சாரத்தில் காலணி வீசப்பட்டது. இதனிடையே கமல்ஹாசனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

மே 17 : 

கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிராச்சாரத்தில் கற்கள், முட்டைகள் வீசப்பட்டன. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும், கற்கள் வீசியவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் இருப்பதாக தெரிவித்தார். கைது நடவடிக்கைக்கு பயப்படவில்லை என்று தெரிவித்த அவர், கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் எனவும் கூறினார். மேலும் இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார் என்று பிரித்து பார்க்க வேண்டியது அவசியம் எனவும் கூறினார். இதனிடையே, காந்தியை அவமதித்த சாத்வி பிரக்யாவை தன்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று மோடி தெரிவித்தார். கடும் எதிர்ப்புக்களை தொடர்ந்து தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா.

மே 18 :

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பிரக்யாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். கோட்சே காந்தியின் உடலை கொன்றதாக கூறிய அவர், பிரக்யா போன்றவர்கள் அவரின் ஆன்மாவை கொன்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும் அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கிடையே கோட்சே குறித்த தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். 

News Counter: 
100
Loading...

Ramya