எகிரும் தங்கம் விலையும்.. அதன் மீது கூடும் மோகமும்..!

share on:
Classic

எத்தனை விதமான ஆபரணங்கள் இருந்தாலும், நமக்கு தங்கம் மீதான மோகம் மட்டும் குறையப்போவதில்லை. அந்த அளவுக்கு நமது செல்வநிலையில் மட்டுமின்றி பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம். இந்த தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் உச்சமாக இன்று சவரன் ஒன்று 28,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன, தங்கம் எப்படி உருவானது என்பது முதல் வரலாறு காணாத விலை உயர்வு வரை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

கி.முக்களில் எகிப்திய பொற்கொல்லர்கள் தான் முதன் முதலில் தங்கத்தை உருக்கி ஊதுகுழல் செய்தார்களாம், அதன்பின்னரே தங்கத்தை கொண்டு ஆபரணங்கள் செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது. கிரேக்கத்தின் க்ரோசிஸ் என்ற மன்னர், தங்கத்தை உருக்கி சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளார். பிற்கால கி.பிகளில் அமெரிக்க ஐக்கிய நாடான கலிஃபோர்னியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. தங்கத்தை மறுபயன்பாடு செய்யவும் முடியும் என்பதால் தங்கம் ஒரு சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக பாறைகளில் படிந்துள்ள தங்கத்தை வேதியியல் முறைப்படி பிரித்தெடுக்கிறார்கள். உலகில் கிடைக்கக் கூடிய மொத்த தங்கத்தின் அளவில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றது. கனடா, அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளிலும் தங்கம் கிடைகின்றது. தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூய தங்கம், அதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 9 முதல் 22 காரட் வரையுள்ள தங்கத்தில், செம்பு, வெள்ளி மற்றும் பிற உலோகங்களை கலக்கும் போது தான் அதில் நகை செய்ய முடியும்.

இப்படியாக ஒரு ஆடம்பர பொருளாக மாறிய தங்கத்தின் விலை கடந்த 2004-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து உயரந்து வந்தது. 2011-ம் ஆண்டு புதிய உச்சத்தை எட்டியது தங்கம். ஆம், அப்போது ஒரு சவரன் ஆபரண தங்கம் 20 ஆயிரத்தை எட்டியது. அதன்பின்னர் 2017-ம் ஆண்டு 24 ஆயிரத்தை தொட்டது. எனினும் கடந்த ஆண்டு வரை தங்கத்தின் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்தது. இந்த 2019-ம் தொடக்கத்திலேயே 25 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை கடந்த ஜூன் மாதம் 26,000ஐ தாண்டியது. தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் ஜூலை மாதம் 27 ஆயிரத்தை தாண்டியும், ஆகஸ்ட் மாதத்தில் 28 ஆயிரத்தை தாண்டியும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2176 வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதிகப்படியான விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. உலகமயமாக்கலுக்கு பின்னர் உள்நாட்டு பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து விடுவதால் அது தங்கத்தின் விலையை பாதிப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

அண்மையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் பங்குசந்தை சரிவை சந்தித்து வருவதால், கடந்த ஒரு மாதத்தில் முதலீட்டாளர்கள் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து  சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகிய பிரிவுகளை நீக்கியது ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கவனித்து வரும் முதலீட்டாளர்கல் தங்கத்தில் போட்ட முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தொடங்கியதால், தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. 

இதனிடையே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 10 சதவீதம் அதிகரித்தது. இந்தியாவுக்கு இணையாக சீனாவும் அதிக தங்கத்தை வாங்கி வருகிறது. ஆனால் சீன நாணயத்தின் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு குறைந்ததும் தங்கம் விலை அதிகரித்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. காஷ்மீர் நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார கண்ணோட்டம் இப்படியே தொடர்ந்தால், இந்த ஆண்டின் முடிவில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Saravanan