பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை சரிபார்க்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

share on:
Classic

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை சரிபார்த்துக்கொள்ளவும், திருத்தங்கள் இருப்பின் அதை வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்குள்ளாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் தொடங்க உள்ள நிலையில், அரசுத்தேர்வுகள் இணையதளத்தில் பதிவு செய்த மாணவ, மாணவியரின் பெயர்ப்பட்டியல் சரியாக உள்ளதா என்பதை அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளிகளும், தங்கள் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ,மாணவியரின் பெயர்களை தங்கள் பள்ளிக்கு என்று வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத்தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியலில் ஏதேனும் பெயர்களில் நீக்கம் அல்லது ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி காலை 10 மணிக்குள்ளாக அனைத்து பள்ளிகளும் சரி செய்துகொள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெயர்ப்பட்டியலில் ஏதேனும் மாணவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால், விடுபட்ட மாணவரின் பெயரை சேர்க்க 12-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகவேண்டும் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

11-ஆம் தேதிக்கு பிறகு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அதுவே இறுதி பெயர்ப்பட்டியல் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவுறுத்தலை, அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் அரசுத்தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் சேதுராம வர்மா வழங்கியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya