சாவித்திரி என்னும் சரித்திரம் மறைந்த தினம் இன்று...!!!

share on:
Classic

நடிகையர் திலகமாய் மக்கள் மனதில் இன்றும் நிறைந்திருப்பவர்...

வெற்றி என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் வெற்றியை அடையும் வரை சாவித்திரி போல சிலர் விடுவதுமில்லை. ஆம், பல தோல்விகளையும் அவமானங்களையும் கடந்த பிறகு வெற்றி மகுடத்தை சூடிய சாவித்திரி எவ்வளவு வேகமாக வளர்ந்தாரோ அதைவிட வேகமாகவே வீழ்ந்தார். பேர் புகழ் என சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் தன் நிஜ வாழ்வில் பெறும் துன்பங்களையும் இறக்கங்களையும் சந்தித்தவர் இவர் என்றால் அது மிகையல்ல. சரி, நடிகையர் திலகம் என தமிழக ரசிகர்களால் போற்றப்பட்ட சாவித்திரியின் வாழ்க்கை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சாவித்திரி கலை மீதான ஆர்வத்தால் சிறு வயதிலேயே நடனம் பயின்று நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திறமையை மட்டுமே துணையாக கொண்டு தமிழ் சினிமாவில் கால் பதித்த அவருக்கு அப்போது வயது 14. தமிழ் தெரியாததால் பல அவமானங்களை சந்தித்த அவர், சினிமா மீதான காதலால் குறுகிய காலத்திலேயே தமிழை நன்றாக பேச கற்றுக்கொண்டு அன்றைய இயக்குநர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆணாதிக்கம் நிறைந்த சினிமா உலகில் திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடம் ஒதுக்கிக்கொண்ட அவர், பெண்களும் ஆண்களுக்கு நிகர் என்பதை நிரூபித்தவர். தனது அழகாலும் நடிப்பாலும் பலரையும் தன் ரசிகர்களாக மாற்றியவர்.

நிழலில் கண்ட நிஜம்.

சமீபத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். சாவித்திரி மறைந்து 38 ஆண்டுகள் கடந்தோடிவிட்டது. ஆனாலும், அவரது ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. அவரது வாழ்க்கை பல சர்ச்சைகளை உள்ளடக்கியது. அதனை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆசைபட்டனர். அதன் வெளிப்பாடாக நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. தென்னிந்தியாவில் முதன்முறையாக ஒரு நடிகையின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் இதுவே. இதில் நடித்த நிழல் சாவித்திரியை பலரும் நிஜமாக பார்த்தது இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

வெற்றி முதல் தோல்வி வரை.

16 வயதில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்ட சாவித்திரி தனது குடும்ப வாழ்க்கையில் சிறிது காலம் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தார். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி இடையிலான காதல் சற்று விசித்திரமானதே. ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் ஜெமினி கணேசனை மணந்த சாவித்திரி அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். திருமண வாழ்வில் சில சறுக்கல்களை சந்தித்த சாவித்திரி, ஜெமினி கணேசனை விட்டு நிறந்தரமாக பிரிந்தார். அதன்பின் குடிப்பழக்கத்திற்கு முழுமையாக அடிமையான சாவித்திரி, வருமான வரி செலுத்த தவரியதால் தன் மொத்த சொத்தையும் இழந்தார். தானே இயக்கி எடுத்த படமும் படுதோல்வி அடைந்தது.

மறைவு -டிசம்பர் 26, 1981.

தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடிபெயர்ந்த கலைமாமணி விருது பெற்ற சாவித்திரி, மிகவும் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாவித்திரி 1980-ம் ஆண்டு கோமா நிலைக்குச் சென்றார். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 26, 1981-ம் ஆண்டு இயற்கை எய்தினார். 

சாவித்திரி என்னும் சரித்திரம் அம்மாடி என்று ஜெமினி கணேசன் அன்பாய் தன்னை அழைப்பதை பெரிதும் விரும்பியவர் சாவித்திரி. நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் வாழ்க்கை குறித்து தெளிவாக பல விஷயங்கள் படமாக்கப்பட்டது. சில காட்சிகளுக்கு ஜெமினி கணேசனின் மகள்கள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். எப்படியோ இறந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நம் நினைவில் இருந்து நீங்காமல் நம்மை ஆட்கொண்டுள்ளதே சாவித்திரி என்னும் சரித்திரத்தின் வெற்றியாக பார்க்கப்படுகின்றது. 

News Counter: 
100
Loading...

aravind