ஜிஎஸ்டி வரி குறைந்துள்ள பொருட்கள் பட்டியல் வெளியீடு....

share on:
Classic

28% ஜிஎஸ்டி வரம்பிற்குள் 34 சொகுசு பொருட்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,

"28% வரி வரம்பிலிருந்து 7 பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த 7 பொருட்களும் 18% வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 28% என்ற உச்சபட்ச வரி வரம்பிற்குள் தற்போது 34 சொகுசு பொருட்கள் மட்டுமே மீதமுள்ளன. சாமானிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும்  குறைக்கப்பட்டுள்ளது. 18% வரி வரம்பிலிருந்த 3 பொருட்கள் 5% வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.  வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இன்றைய ஜிஎஸ்டி வரி விகித குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன. நுகர்வோர் மூலமான பொருட்கள் கொள்முதல் விகிதம் இப்போது அதிகரித்து காணப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டு தற்போது 5% வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

சக்கர நாற்காலி, ரூ. 100-க்கு அதிகமான சினிமா டிக்கெட், லித்தியம் பேட்டரி சார்ஜர், கணினி மானிட்டர், தொலைக்காட்சி திரை, டயர் உள்ளிட்ட பொருட்கள் 28% வரம்பில் இருந்து 18% மற்றும் 5% வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ. 100-க்கு குறைவான சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 12%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் மீதான அதிகப்படியான வரி விகிதத்தை குறைப்பதே எனது அடுத்த இலக்கு. ஜிஎஸ்டி-யின் இந்த புதிய விகிதங்கள் அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் ஜனவரி மாதம் நடைபெறும்" இவ்வாறு கூறினார். 

News Counter: 
100
Loading...

mayakumar