"என் இனிய தமிழ் மக்களே" பாசத்துக்குரிய பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று..

share on:
Classic

அல்லிநகரத்து சொந்தக்காரர், இயக்குநர் இமயம் பாராதிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிராமத்து எழில் கொஞ்சும் அவரது படங்களின் சிறப்பு குறித்த தொகுப்பை தற்போது காணலாம்...

ஸ்டுடியோக்களிலிருந்து சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்து தன்னுடைய முதல் படமான பதினாறு வயதினேலே படத்திலேயே சுக்குநூறாக உடைத்தெறிந்தார் பாரதிராஜா. மயிலின் மிளிர்ந்த நடிப்பும், சப்பாணியின் அரை நிர்வாண உடையும், பரட்டையின் புது ஸ்டைலும், குருவம்மாளின் யதார்த்தமும் கிராமத்தின் வாழ்வியலை அப்பட்டமாக நம் கண்முன்விரிய செய்தது.

ராதிகா-சுதாகர் நடித்த கிழக்கே போகும் ரயில், ராதிகா-விஜயன்-சுதாகர் நடித்த நிறம் மாறாத பூக்கள், பாரதிராஜா-அருணா நடித்த கல்லுக்குள் ஈரம், கார்த்திக்-ராதா நடித்த அலைகள் ஓய்வதில்லை, சத்யராஜ்-ரேகா நடித்த கடலோரக் கவிதைகள் போன்ற படங்கள் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டன. காதலை மட்டும் அடிப்படையாக கொண்ட படங்கள் என்றாலும், அவற்றில் வெவ்வேறு கதாபாத்திரங்களையும், வெவ்வேறு வாழ்க்கை அம்சங்களையும் புகுத்தியிருப்பார் பாரதிராஜா. கிராமத்து படம்தான் எடுப்பார் பாரதிராஜா, என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கியது கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள்.

சிவாஜி - ராதா நடித்த முதல் மரியாதை திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளை இதுவரை எந்த தமிழ் சினிமாவும் பார்த்ததில்லை. பாரதி ராஜாவின் வேதம் புதிது திரைப்படம் சாதி பாகுபாட்டினை ஆழமாய் பதிவு செய்தது. பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு அண்ணன் - தங்கை பாசத்தை தாங்கி வந்த திரைப்படம் "கிழக்கு சீமையிலே". பெண் சிசுக்கொலையை சாடிய கருத்தம்மா பாரதிராஜாவை அசைக்க முடியாத இடத்தில் தூக்கி நிறுத்தியது.

கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சீமான், பொன்வண்ணன் போன்ற வெற்றிப்பட இயக்குனர்களை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவையே சேரும். வைரமுத்து போன்ற பாடலாசிரியர்களையும், ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா, ரஞ்சனி, ரதி, சுகன்யா, விஜயசாந்தி போன்ற ஏராளமான நாயகிகளையும், கார்த்திக், கவுண்டமணி, நிழல்கள் ரவி, நெப்போலியன், ராஜா, பாண்டியன் உள்ளிட்ட கதாநாயகர்களையும் அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜாதான்.

பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ‘நந்தி' விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார், பாரதிராஜா.
பல அற்புதமாக படங்களை வழங்கிய பாரதிராஜாவுக்கு திரையுலகில் என்றுமே ஒரு அழியாத இடம் உண்டு. "என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்ற சிம்மக்குரல் கலையுலகம் வாழும்வரை ஒலித்து கொண்டே இருக்கும்.

News Counter: 
100
Loading...

Ragavan