கால் நுற்றாண்டுகால தமிழ் சினிமாவை தன்வசம் வைதிருந்த நகைச்சுவை நாயகன் கவுண்டமணி..!

share on:
Classic

நூறு ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள தமிழ் சினிமாவை, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்காலம் தன்னுடைய சிரிப்பு ராஜ்ஜியத்தால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. அவரது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.

உடுமலைப்பேட்டை அருகே வல்லகொண்டாபுரத்தில் சுப்பிரமணியாக பிறந்த இவர், எதிரில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அசராது கவுண்ட்டர் கொடுத்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியதால் ’கவுன்ட்டர் மணி’யாக பிரபலமடைந்தார். நாகேஷ் நாயகனாக நடித்த ’சர்வர் சுந்தரம்’ படம்தான் கவுண்டமணியின் முதல் படம். தொடர்ந்து சிறுசிறு வேடங்களில் நடித்த கவுண்டமணிக்கு பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. அதில் அவர் பேசிய ’பத்த வெச்சிட்டியே பரட்ட’ என்ற வசனம் இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.

1984-ம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் தன்னுடன் செந்திலை இணைத்துக் கொண்டு சார்ளி சாப்ளினுக்கு நிகரான கூட்டணியை உருவாக்கினார். இப்படத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா எனும் கதாபாத்திரத்தில் கவுண்டமணியும் அவரிடம் வேலை பார்ப்பவராக செந்திலும் செய்த அதகளம், தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரத்தில் புதிய அத்யாயத்தை உருவாக்கியது. தான் நடித்த 750-க்கும் மேற்பட்ட படங்களில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் செந்திலுடன் சேர்ந்து நடித்தார் கவுண்டமணி. இது ஒரு உலக சாதனையும் கூட.

என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா, நாகேஷ் என காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் டிரெண்டை கவுண்டமணியும் பின்பற்றினார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் வணீக ரீதியாக தோல்வியை தழுவின. கவுண்டமணி அவ்வளவுதான்.. இனி முன்புபோல் அவரால் ஜொலிக்க முடியாது என்ற பேச்சு எழுந்த போது, ’கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அதிரடியான கம் பேக் கொடுத்து மீண்டும் தனது சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார் கவுண்டமணி.

காலம் தாண்டி நிலைக்கும் படைப்பை கொடுப்பதுதான் ஒரு நல்ல கலைஞனுக்கான அடையாளம். அந்தவகையில், நடிப்பதை குறைத்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும் இன்றும் சோஷியல் மீடியாவில் மீம்ஸ் வாயிலாகவும் மொபைல் ஃபோன் ரிங் டோன் வாயிலாகவும் இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் பயணித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தமிழ் திரையுலகையும், தமிழர் மனங்களையும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கவுண்டமணி, தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படும் ஒரு ஈடு இணையற்ற அதிசயக் கலைஞன்.

News Counter: 
100
Loading...

Ragavan