ஆனந்த யாழை மீட்டியவன்..!!

share on:
Classic

ஆனந்த யாழை மீட்டியவன், மழையை மட்டும் அல்ல வெயிலையும் கொண்டாடியவன், ’மலர் மட்டுமா அழகு உதிரும் இலைகூட அழகு’ என அனைத்திலும் அழகை கண்டு ரசித்த கவிஞன் நா. முத்துக்குமார். இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயின்ற முத்துக்குமார் ‘பட்டாம் பூச்சி விற்பவன்’ எனும் கவிதை தொகுப்பின் மூலம் சிறந்த கவிஞராக அறியப்பட்டார் நா. முத்துக்குமார். சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்ற ஆர்வத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

‘முத்துமுத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு...’ என்று அவருடைய பெயருடனே தொடங்கும் வீர நடை திரைப்பாடல்தான் முத்துக்குமார் எழுதிய முதல் பாடல்.இந்தப் பாடலில் பல இடங்களில் உவமை, உருவகங்களைக் கையாண்டு இருப்பார். இன்று வரை தமிழ்த் திரைப் பாடல்களில் உவமை, உருவகங்களை அதிகம் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வரிசையில் எழுதப்பட்ட‘காதல் கொண்டேன்’ படத்தின் பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு தனிக்கவிதை.

7 ஜி ரெயின்போ காலனி படத்தின் ‘ கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என்ற பாடல் வரிகள் மூலம் ஒருதலைக் காதலின் துயரத்தை, காதல் நிறைவேறாத ஆற்றாமையால் தவிக்கும் மனதின் துடிப்புகளை கண்முன் நிறுத்தினார். தனது காதல் உலகில் வலம் வருவோருக்காக முத்துக்குமார் எழுதிய ‘ சுட்டும் விழிச்சுடரே... சுட்டும் விழிச்சுடரே.. என் உலகம் உன்னை சுற்றுதே...! என்ற வரிகளை உச்சரிக்காத காதலர்களே இல்லை. அந்த பாடலில் வரும் ‘உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் ‘, கொஞ்சும் போது மழைய அழகு, கண்ணாலே கோவப்பட்டால் வெயில் அழகு ‘ எனும் வரிகள் அனைத்து காதலர்களின் விருப்ப மொழியானது.

மழையை மட்டுமே மற்ற கவிஞர்கள் கொண்டாடி வந்த வேளையில், வெயில் கூட அழகு என தனது பாடல் மூலம் அதனை கொண்டாடியவர் தான் நா. முத்துக்குமார். வெயில் படத்தில் வரும் ‘ வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி என்ற பாடல் மூலம் வெயிலுடன் மல்லுக்கட்டினார் நா. முத்துக்குமார்.

அம்மாவுக்காகவே தாலாட்டுப் பாடல்களை எழுத்தி திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில், “ ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு” என தந்தைக்கு தாலாட்டு கொடுத்தும், ”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போக்கும் தந்தை அன்பின் முன்னே” எனும் பாடல் மூலம் கண்ணீரை வரவழைத்தும் தந்தை என்ற உறவுக்கு உயிர் கொத்தவர் தான் இந்த முத்துக்குமார்.

தந்தை - மகளுக்கு இருக்கும் உறவை தங்கமீன் படத்தின் அழகான பாடல் வரிகள் மூலம் உணர்த்திய முத்துக்குமார் அப்பாக்களை தனது மகள்களுக்கு சூப்பர் ஸ்டாரக்கினார். “ ஆனந்த யாழை மீட்டுகிறாயடி.. நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் “ பாடலின் வரிகள் முத்துக்குமாருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி, சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20 க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், கிராமம் நகரம் மாநகரம், ஆனா ஆவன்னா, பாலகாண்டம், அணிலாடும் முன்றில், குழந்தைகள் நிறைந்த வீடு போன்ற அத்தனைத் படைப்புகள் தமிழுக்கு புதிய வெளிச்சங்களை வழங்கின. கவிதை வரிகளால் ஆனந்த யாழை மீட்டிய நா. முத்துக்குமாரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

News Counter: 
100
Loading...

Ragavan