மக்களை ஏமாற்றி வெற்றி..சட்டப் பேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்..!

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் தவறான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அதிமுக- திமுக இடையே விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கைத்தறி கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதாகவும், ஆளும் கட்சியான அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதாகவும் கூறினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, நாடாளுமன்ற தேர்தலில்  தவறான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதாக விமர்சித்தார். அடுத்த தேர்தலில் தாங்களே வெற்றி பெறுவோம் எனவும் முதலமைச்சர் கூறினார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் எனவும், அந்தளவிற்கு பணம் இங்கே இருக்கிறதா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அப்போது மீண்டும் திமுக வெற்றி குறித்து பேசிய சுந்தர், தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை திமுக பெற்றுள்ளதாகவும், அடுத்து வேலுாரிலும் வெற்றிக்கொடி நாட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உங்களை பல ஆண்டுகள் கோட்டை பக்கமே தலை காட்டாமல் செய்தவர் எம்.ஜி.ஆர் என கூறினார். அதற்கு உடனடியாக பதில் அளித்த திமுக உறுப்பினர் சுந்தர், 1996 ஆம் ஆண்டு தேர்தலில் உங்கள் தலைவர் தோல்வியை தழுவியவர் எனவும், ஆனால், எங்கள் தலைவர் ஒருபோதும் தோல்வியையே தழுவாதவர் என்றும் கூறினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

aravind