மாடித்தோட்டம் என்னும் மாய உலகம்... மனசோர்வில் இருந்து மீள வண்ணமயமான யுக்தி...

share on:
Classic

மாடித்தோட்டம் என்னும் மாய உலகம்... மனசோர்வில் இருந்து மீள வண்ணமயமான யுக்தி...

தினமும் காலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் சென்று மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து வேலைகளை செய்து முடித்த பின் இரவு மிகுந்த மனசோர்வுடன் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை எண்ணி சரியாக தூக்கமில்லாமலேயே பல பெண்களின் இரவுகள் விடிகின்றன. உண்மையில் நாம் நாள் முழுவதும் வேலை மட்டுமே செய்கின்றோமா? என்றால், அதற்கான பதில் இல்லை என்பதே. ஓய்வு எடுக்க கிடைக்கும் நேரங்களில் கைபேசிகளை பார்த்தே நாம் காலம் கடத்தி விடுகின்றோம். அதுமட்டுமின்றி கிடைக்கும் உணவுகளை ஆன்லைனில் ஆரோக்கியமானதா? என்று கூட பார்க்காமல் வாங்கி சாப்பிடுகிறோம். இப்படி மனசோர்வும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களில் இருந்தும் மீள்வது எப்படி என்ற கேள்வி சாமான்யனில் குரலாகவே ஒளிக்கின்றது. 

ரசாயனம் to ஆரோக்கிய உணவு:
  
நாம் கடைகளில் வாங்கும் காய்கறிகள், கீரைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரசாயனம் கலந்தே நமக்கு கிடைக்கின்றன. ஆரோக்கியமற்ற அவற்றை உண்பதால் நாளடைவில் பல உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது மாடியில் சிறியதாய் தோட்டம் அமைத்து தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை அறுவடை செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். பலர் அதனை கடினமான ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால், மாடித்தோட்டம் அமைப்பது என்பது மிகவும் சுலபமான ஒன்றே. முழுமையான ஈடுபாடு இருந்தாலே அதற்கு போதுமானது. தமிழக அரசும் தோட்டக்கலைத்துறை மூலம் மான்ய விலையில் மாடித்தோடம் அமைப்பதற்கான பொருட்களையும், விதைகளையும் வழங்கி வருகின்றது. நம் கண்முன்னே நாமே வளர்த்து காய்கறிகளை அறுவடை செய்து அதனை சாப்பிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. ரசாயனம் கலந்து பல நாட்களுக்குப் பிறகு நமக்கு கடைகளில் கிடைக்கும் காய்கறிகளை விட நாம் வளர்க்கும் மாடித்தோட்டம் ஆரோக்கியத்துடன் சேர்ந்து மனமகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

 

முதலில் மாடித்தோட்டம் தொடங்குபவர்களுக்கு சில டிப்ஸ்;

  முதன்முதலில் மாடித்தோட்டம் தொடங்க நினைப்பவர்கள் புதினா, வெந்தயம் போன்ற கீரை வகைகளில் இருந்து தொடங்கலாம். பொதுவாக புதினாவை கிள்ளியபின் அதன் காம்பை சாதாரண மண்ணில் நட்டு வைத்தாலே போதும். ஒருசில தினங்களில் புதினா மீண்டும் வளர தொடங்கிவிடும். மண்கலவை, நாற்றை மாற்றி நடுவது, சீசனிற்கேற்ப எந்த காய்கறிகளை வளர்ப்பது போன்ற பல தகவல்கள் இணையதளத்தில் சுலபமாக கிடைத்துவிடும். நம்பிக்கையுடன் தொடங்கினால் ஒருசில மாதங்களில் நீங்களும் மாடித்தோட்டத்தை அமைத்து வெற்றி கொள்ளலாம். 

 

மனசோர்வை மறக்க வைக்கும் மாய உலகம்;

வண்ண வண்ண பூக்கள், காய்கறிகள் என பார்க்கவே வசீகரமாக இருக்கும் இந்த மாடித்தோட்டம் நம் மனதையும் வண்ணங்களால் அலங்கரிக்கின்றன. காலை எழுந்ததும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, பூக்களை பறிப்பது, காய்கறிகளை அறுவடை செய்வது என நம் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பாசிடீவாகவே வைத்திருக்கின்றன. இதன்காரணமாக மனசோர்வு, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து நம்மை பெரிதும் பாதுகாக்கின்றது. அதுமட்டுமின்றி இயற்கையை காக்கவும், வளரும் அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பாதையையும் அமைத்திட இந்த மாடித்தோட்டம் நிச்சயம் நமக்கு உதவும். புத்தாண்டில் ஒரு புதிய செடியுடன் வருடத்தை தொடங்கி நாமும் மாடித்தோட்டம் அமைத்து மகிழ்ச்சியுடன் இயற்கையை காக்க கரம் கோர்ப்போம்....

 

News Counter: 
100
Loading...

youtube