
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்துவதற்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை ஆறுமுசாமி விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. மேலும், தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் என்றும் கோரியது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன்ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அப்போலோவின் கோரிக்கையையும் நிராரித்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் சசிகலா தரப்பு பதிலளிக்க உத்தரவித்த நீதிபதிகள், வரும் வெள்ளிக் கிழமைக்கு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.