குளியல் சோப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா..? சோப் வாங்க சில டிப்ஸ்...

share on:
Classic

ஈர்க்கும் விளம்பரத்தையும், வண்ணமயமான அட்டைப்படங்களையும் மட்டுமே பார்த்து நம்மில் பலர் குளியல் சோப்புகளை வாங்குகின்றோம். அது தவறானது.

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என ஒவ்வொருவரது சருமமும் ஒருவகை. எனவே, விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, ஏதேனும் ஒரு கண்கவர் சோப்பை வாங்காமல், தரமான சோப்பைத் தேர்ந்தெடுத்து வாங்கி உபயோகிப்பதே சருமத்துக்கு நல்லது.

உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பைத் தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்...
உப்பு, கொழுப்பு (Fat), காரம் (Alkaline) சேர்ந்த கலவை தான் குளியல் சோப். இதை தயாரிப்பதற்கு தாவரம் மற்றும் விலங்கின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அதனால் குழந்தைகளுக்கு சோப்பைப் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு சோப் வாங்கும் போது கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை தேவை. அவர்களுக்கு பேபி சோப் தான் சிறந்தது.

வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். பேபி சோப் உபயோகிப்பது அவர்களின் சருமத்துக்கு உகந்ததல்ல. மேலும், சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த அல்லது ஆன்டிசெப்டிக் சோப்களை உபயோகிக்க கூடாது. இத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டாலும், சருமத்தைக் கறுப்பாக மாற்றிவிடக்கூடும். சோப்புகளில் ஆரம்ப ’Ph பேலன்ஸ்’ அளவே 7.5 அல்லது 8-ஆக இருக்கிறது. நமது முகத்தின் Ph பேலன்ஸ் 5.5 ஆகும். ஃபேஸ்வாஷின் Ph பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால், முகத்தைக் கழுவ சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.

நாம் வாங்குவது உண்மையில் குளியல் சோப்தானா என்று பார்க்க வேண்டும். சோப்பின் மேல் உறையில் டாய்லெட் சோப் என்று போட்டிருக்க வேண்டும். பல சோப்களின் மேல் உறைகளில் சிறிய எழுத்துக்களில் பாத்திங் பார் (Bathing Bar) என்றுதான் போட்டிருக்கும்.  இவை குளியலுக்கு ஏற்ற சோப் அல்ல. ஆனால், பாத்திங் பார் என்று போட்டிருக்கும் சோப்புகள் தான் தொலைக்காட்சிகளில் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக,  நாம் கவனிக்க வேண்டியது டி.எஃப்.எம் சதவிகிதம் (Total Fatty Matter). எல்லா டாய்லெட் சோப்களிலும் டி.எஃப்.எம் சதவிகிதம் இருக்கும். இதை வைத்து சோப் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. டி.எஃப்.எம் சதவிகிதம் 75 முதல்  80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. டி.எஃப்.எம் சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் கிரேடு 2 எனவும், 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப்புகள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை அல்ல.

நம் சருமத்தின் தன்மைக்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, ஈரப்பதம் (moisturiser) அதிகம் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்களின் சருமம் முதிர்ச்சி பெற்றிருக்கும். இவர்களும் மாய்ஸ்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். இவற்றைக் குழந்தைகளும் மென்மையான சரீரம் கொண்டவர்களும் உபயோகிக்க கூடாது. எப்போதும், வாசனை அதிகமுள்ளது என்ற காரணத்துக்காக மட்டும் சோப்களை தேர்ந்தெடுத்துவிடக் கூடாது.

News Counter: 
100
Loading...

youtube