இதுவரை நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சி எத்தனை இடங்களை பிடித்துள்ளது..?

share on:
Classic

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இதுவரை நடைபெற்ற தேர்தலில் யார் எத்தனை இடங்களை பிடித்துள்ளனர் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா சுகந்திரம் பெற்றபின் முதல் லோக்சபா தேர்தல் 1952 ஆண்டு நடைபெற்றது. அப்போது மொத்தம் 489 தொகுதிகள் மட்டுமே இருந்தன. அதில் தேசிய காங்கிரஸ் கட்சி 364 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 37 இடங்களையும், சிபிஐ 16 இடங்களையும் தனதாக்கின. முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார்.

1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் 371 இடங்களையும், சுயேட்சைகள் 42 இடங்களையும், இந்திய பொதுவுடமைக் கட்சி 27 இடங்களையும் பிடித்தது. 3-வது லோக்சபா தேர்தல் 1962-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதிலும் காங்கிரஸ் கட்சி 361 தொகுதிகளை தனதாக்கி மகுடம் சூடியது. இந்திய பொதுவுடமைக் கட்சி 29 தொகுதிகளையும், சுதந்திரக் கட்சி 18 இடங்களையும் மற்ற கட்சிகள் 84 இடங்களையும் பிடித்தன.

1967-ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் கட்சி, அதாவது தற்போதைய பாரதிய ஜனதா கட்சி 35 தொகுதிகளைப் கைப்பற்றியது. அந்த தேர்தலில் தேசிய காங்கிரஸ் 283 தொகுதிகளிலும், சுதந்திராக் கட்சி 44 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 156 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் கூட்டணி 352 இடங்களிலும், ஜனநாயகக் கூட்டணி 51 இடங்களிலும், திமுக 23 இடங்களிலும், மற்ற கட்சிகள் 67 இடங்களிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டன. 

1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 170 தொகுதிகளை மட்டுமே தனதாக்கி சரிவை சந்தித்தது. ஜனதாக் கூட்டணி 345 தொகுதிகளைக் கைப்பற்றி முதன்முறையாக மொரார்ஜி தேசாய் தலைமையில் அரியணை ஏறியது. இந்த தேர்தலில் அதிமுக 19 தொகுதிகளை கைப்பற்றின. 

ஜனதாக் கூட்டணி உடைந்ததால் ஆட்சி கவிழ்ந்து 1980 -இல் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இம்முறை காங்கிரஸ் 374 இடங்களைப் பெற்று இமாலய வெற்றியைக் கண்டது. கடந்த முறை ஆட்சியமைத்த ஜனதா கூட்டணியால் 34 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்த தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி 53 இடங்களையும், மற்ற கட்சிகள் 63 இடங்களையும் பெற்றது. 1984 ஆண்டு அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய காங்கிரஸ் 404 தொகுதிகளிலும், சிபிஎம் 22 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

1989-ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் 197 தொகுதிகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. 143 இடங்களைப் பெற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வி.பி.சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 244 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது பா.ஜ.க 120 இடங்களையும், ஜனதா தளம் 59 இடங்களையும் பெற்றன.

1996-ஆம் ஆண்டு பாஜக 161 இடங்களைப் பிடித்தது. இம்முறை காங்கிரஸ் 140 இடங்களையும், திமுக 17 இடங்களையும் தேசிய முன்னணி உள்ளிட்ட மற்ற கட்சிகள் 225 இடங்களையும் பெற்றன. 

1998-ல் நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதன்பின் 182 இடங்களைப்பெற்ற பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 141 இடங்களைப் பெற்றது. அதன்பின் 1999-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க 270 தொகுதிகளிலும், காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், இந்திய பொதுவுடமைக் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றன.

2004-ல் காங்கிரஸ் 145 இடங்களும், பா.ஜ.க 138 இடங்களும், இந்திய பொதுவுடமைக் கட்சி 43 இடங்களும், மற்ற கட்சிகள் 217 இடங்களையும் பெற்றன. 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் 206 தொகுதிகளிலும், பா.ஜ.க 116 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் தலைமையில் மன்மோகன் சிங் பிரதமரானார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 282 இடங்களை கைப்பற்றி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பெற்றன. கடந்த முறை அதிமுக 37 இடங்களைக் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

News Counter: 
100
Loading...

Ragavan