அமெரிக்காவின் மீது சீனா உச்சக்கட்ட ஆத்திரம்...!

share on:
Classic

'ஹவாய்' நிறுவனரின் மகளும், தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஸோ திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மெங் வான்ஸோ கைது:
ஹவாய் நிறுவனரின் மகள் மெங் வான்ஸோ கனடாவில்  கடந்த 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஹவாய் நிறுவனம், மெங்கை விடுதலை செய்யக்கோரியும், விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் அந்நாட்டு அரசிடம் கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து, கனடாவில் உள்ள சீன தூதரகம் அழுத்தத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள விவரமே தற்போது தான் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா மீதான  சீனாவின் ஆத்திரம் விண்ணை தொட்டுள்ளது. 

சீன தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடுகள்:
ஹவாய் உட்பட சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை உபயோகிப்பதில் மேற்கத்திய நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மேலும், சீன தொலைதொடர்பு சேவையில் கோலோச்சும் ஹவாய் நிறுவனத்தை தங்களது நாடுகளில் நுழைய விடக்கூடாது என்பதில் கங்கனம் கட்டிக்கொண்டு அலைகின்றன மேற்கத்திய நாடுகள். 

வர்த்தகப் போர்:
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் நிலவி வரும் நிலையில் மெங் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரிவிதிப்பை கணிசமாக உயர்த்தி வருகின்றன. மெங் கைது செய்யப்பட்ட அதே நாள் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்காததே மெங் கைது செய்யப்பட காரணமாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

பொருளாதார தடைகள்:
வட கொரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. இதில், வட கொரியா மீதான தடைகள் பகுதியளவு விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் ஈரான் மீதான தடைகள் மட்டும் வலு பெற்றுள்ளன. இந்த 2 நாடுகளுடனும் சீனா நெருக்கமாக நட்பு பாராட்டி வருவதாலும், தடைகளை மீறி ஹவாய் நிறுவனம் செயல்பட்டதாலுமே மெங் வான்ஸோ கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar