“நான் ஒரு கிளர்க் போல் வேலை செய்கிறேன்”.. கர்நாடக முதலமைச்சர் வேதனை..

share on:
Classic

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி: 

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. கர்நாடக முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர். இந்நிலையில் இந்தக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
 

 

முதலமைச்சர் குமாரசாமி வேதனை:

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குமாரசாமி “ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் தலையிடுவதால், முதலமைச்சராக அல்லாமல் நான் ஒரு க்ளர்க் போல வேலை செய்கிறேன்”என்று தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் தங்களுக்கு சாதகமான செயல்களை செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டினர். தான் மிகப்பெரிய அழுத்தத்தில் வேலை செய்வதாகவும் குமாரசாமி மனம் வருந்தினார். 

 

பிக்பிரதர் காங்கிரஸ் :

காங்கிரஸ் அனைத்து வகையான உத்தரவுகளிலும் கையெழுத்திடச் சொல்லி நிர்பந்தப்படுத்துவதாகவும், பிக்பிரதர் போல் செயல்படுவதாகவும் குமாரசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. கேபினெட்டை விரிவாக்கம் செய்ய சொல்வதாகவும், குமாரசாமியின் அனுமதி இல்லாமலே அரசாங்க அமைப்புக்களுக்கு தலைவர்களை நியமிப்பதாகவும் அந்த கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார்.

 

முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவுரை:

பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை கூட்டணிக்கு எதிராக யாரும் செயல்படகூடாது என்று கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா அக்கட்சியினருக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. கர்நாடகத்திலிருந்து தங்கள் கட்சியின் குறைந்தபட்சம் 6 எம்.பி-க்களையாவது பெறவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. 28 எம்.பிக்களை கொண்ட கர்நாடக நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது பிஜேபி 16 எம்.பிக்களையும், காங்கிரஸ் 10 எம்.பிக்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 எம்.பிக்களையும் கொண்டுள்ளனர்.
 

 

ஆட்சியை கவிழ்க்க காத்திருக்கும் பிஜேபி:

காங்கிரஸ்-மஜத கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இந்த கூட்டணியை முறியடிக்க கடுமையாக முயற்சித்து வந்த பாஜக தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு எப்படியும் காங்கிரஸ்-மஜத கூட்டணி முறிந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ள பாஜக அதன் பிறகு கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க காத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

News Counter: 
100
Loading...

aravind