நான் சாகடிக்கப்படலாம், ஆனால் தோற்கடிக்கப்பட மாட்டேன் - சே குவேரா

share on:
Classic

நான் சாகடிக்கப்படலாம், ஆனால் தோற்கடிக்கப்பட மாட்டேன் என்று கூறிய சே குவேராவின் பிறந்தநாள் இன்று. இதுகுறித்த செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்….

அவர் சொன்னதைப் போலவே, வறுமையும் பசியும் நோயும் அவருடைய உயிரைப் பறிக்க எவ்வளவோ போராடின. ஆனால், அவர் அவற்றை எதிர்த்துப் போராடி மருத்துவரானார். 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் நாள் அர்ஜெண்டினாவில் சே குவேரா பிறந்தார். இடதுசாரி குடும்பத்தில் பிறந்ததால், இளம் வயதில் இருந்தே அரசியல் மீது தீவிரமான ஈர்ப்பு கொண்டிருந்தார். மருத்துவம் முடித்த பின் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க எண்ணினார் சே. அவருடைய நண்பர் அல்பர்ட்டோவுடன் சேர்ந்து பைக்கில் முதலில் தென் அமெரிக்காவைச் சுற்றிவர தீர்மானித்தார். அவரது பயணத்தின்போது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அதிகார வர்க்கத்தின் கீழ் சிக்கி தவிக்கும் மக்களின் துயரங்களை அவர் உணர்ந்தார். துன்பத்தில் வாடும் மக்களை காப்பாற்ற அவர்களுக்காகப் போராட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஓங்கியது.

அமெரிக்காவின் பிடியில் அடிமைப்பட்டிருந்த கியூபாவை விடுவிக்க பிடல் காஸ்ட்ரோவுடன் கைகோர்த்தார் சே குவேரா, பாடிஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி, மக்களின் நம்பிக்கை நாயகனான உருவானார் சே. இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமைகள் இல்லை என்ற மக்களின் உற்சாகக் குரலில் சே குவேராவும், காஸ்ட்ரோவும் தங்களின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். கியூபாவுக்குப் பிறகு அடுத்ததாக காங்கோவில் நடந்த ஆயுதப்புரட்சிக்கு உதவப் புறப்பட்டார் சே.

காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்கிருந்த வீரர்களுக்கு கொரில்லா பயிற்சிகளை அளித்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பயணம் செய்த வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு இருந்த தட்பவெப்ப சூழ்நிலைகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். ஆனாலும், மக்களுக்கான தனது போராட்டத்தை மட்டும் அவர் கைவிடவில்லை. ஆட்சியில் இருந்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இவரை பிடிக்க அமெரிக்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியாக பொலிவிய ராணுவத்திடம் பிடிபட்ட சே, பொலிவியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சிறைவைக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார் சே குவேரா.

இன்றைய இளைஞர்கள் சே குவேரா படம் போட்ட டீ ஷர்ட்டுகளை விரும்பி அணிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய சேகுவேரா மறைந்தாலும், அவரது எண்ணங்களும் எழுத்துகளும் மக்களிடம் இன்றும் உயிர்ப்புடன் தான் உள்ளது என்பதை இளைஞர்கள் டீ ஷர்ட்டுகள் மூலம் காட்டுகிறார்கள். விடுதலைக்காக கொலை செய்யப்பட்ட கல்லறைகளில் விதை வளராத கல்லறை எதுவுமில்லை..!

News Counter: 
100
Loading...

Ragavan