ஐசிசி அறிவித்த கனவு அணி-11 வீரர்கள் தேர்வு..!

share on:
Classic

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்தது இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய 11 பேரை ஐசிசி கனவு அணியாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை வென்ற அந்த 11 பேரை தற்போது பார்க்கலாம்.

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இறுதி வரை மனம் தளராது போராடிய கேப்டன் கேன் வில்லியம்சனை கனவு அணியின் கேப்டனாக நியமித்திருக்கிறது ஐசிசி. கேப்டன் கூலுக்கு அடுத்த படியாக அனைவராலும் கவரப்பட்ட கேன் வில்லியம்சன் ஒரு கருப்பு உடை அணிந்த காலா..! இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சனின் நுணுக்கமான திறன் நியூசிலாந்தை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றது. கேன் வில்லியம்சன் கோப்பையை வெல்லாவிட்டாலும் கோடான கோடி ரசிகர்களின் மனங்களை வெல்ல தவறவில்லை. 

கேன் வில்லியமசன் தலைமையிலான அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவும், ஜேசன் ராயும் இடம்பெற்றுள்ளனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா இந்திய அணியின் மிகப்பெரும் பலமாகவே வலம் வந்தார். ஜேசன் ராயின் விளையாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்பில் ஆழ்த்தியது. ராயின் ஆட்டமே இங்கிலாந்தின் கோப்பைக்கு அச்சாணியாகவும் அமைந்தது என்றால் அது மிகையல்ல. வளரும் நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ் நடப்பு தொடரில் எதிரணிகளை கடுமையாக மிரட்டியது. அதிலும் குறிப்பாக சாகிப் அல் ஹசனின் பேட்டிங், பவுலர்களை களங்க வைத்தது. 

உலகக் கோப்பை வரலாற்றில்  606 ரன்களும் 11 விக்கெட்களும் வீழ்த்திய ஒரே ஆல்ரவுண்டர் எனும் புதிய சாதனையை நிகழ்த்திய சாகில் அல் ஹசனும் கனவு அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் மற்றொரு பேட்ஸ்மேனான ஜோ ரூட்டும், 44 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை உச்சிமுகர முக்கிய காரணங்களும் ஒருவரான பென் ஸ்டோக்சுன் கனவு அணியில் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது எரிமலையாய் சீறி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய சகலகலா வல்லவன் பென் ஸ்டோக்ஸ். 

இந்த அணியின் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். எம்.எஸ் தோனி, ஜாஸ் பட்லருக்கு அடுத்தபடியாக அலெக்ஸ் கேரியின் அசத்தலான விக்கெட் கீப்பிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர், நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்கியூசன், இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் கனவு அணி பவுலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

உலகின் டாப் கிளாஸ் வீரர்களான இந்த 11 பேரும் ஒரே மைதானத்தில் ஒரே அணியாக விளையாடினால் எப்படி இருக்கும் என்பது ஐசிசி-யின் கனவு மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களின் கனவாகவும் உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind