இந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..?

share on:
Classic

இந்தியன் 2 படத்தில் காமெடி நடிகர் விவேக் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ், இந்தியன் 2 என பிசியாக உள்ளார் கமல்ஹாசன். மிகப்பெரிய பட்ஜெட்டுடன் தயாராகி வரும் இந்தியன் 2 குறித்து தினம் ஒரு செய்தி என வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், நடிகர் விவேக் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதி செய்தாலும், இந்தியன் 2 குழுவினர் விவேக் நடிப்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒரு வேளை இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், கமல்ஹாசன் விவேக் இணையும் முதல் படமாக இந்தியன் 2 இருக்கும். முன்னதாக கே.பாலச்சந்தரின் பார்த்தாலே பரவசம் படத்தில் கௌரவ தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். எனினும் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த விவேக் மற்றும் கமல்ஹாசன் இணைந்து வரும் காட்சிகள் இருக்காது.

1996-ம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 2021-ல் இப்படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் சமுத்திரகனி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வலியுறுத்தி படம் இயக்கும் சங்கர், இப்படத்தில் நவீன் இந்தியாவில் பெண்களுக்கு நிகழும் குற்றங்களில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதனால் தான் பல்வேறு நடிகைகள் இப்படத்தில் நடித்து வருவதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News Counter: 
100
Loading...

Ramya