'2.0' படத்தில் வரும் பக்‌ஷிராஜன் யார்?... சலீம் அலியின் வாழ்க்கை வரலாறு

share on:
Classic

'இந்தியாவின் பறவை மனிதர்' என போற்றப்படும் சலீம் அலியின் வாழ்க்கை வரலாறு '2.0' படத்தின் மூலம் திரையில் நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. 

'2.0' படத்தில் யார் ஹீரோ? யார் வில்லன்? என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது. பறவைகளை காக்க முயற்சிக்கும் அக்‌ஷய் குமார் ஹீரோவா? அல்லது கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் ரஜினிகாந்த் ஹோரோவா? என்பது தான் கோலிவுட்டில் இப்போதைய மெகா டாக்.  பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றான்? என்ற கேள்விக்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி இது தான். 2.0 படத்தில் பக்‌ஷிராஜன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் அக்‌ஷய் குமார். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பக்‌ஷிராஜன் கதாபாத்திரமாக நிஜத்தில் வாழ்ந்தவர் தான் இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி...

பறவைகள் மீது காதல் பிறந்த தருணம்:
1896 நவம்பர் 12 அன்று மும்பையில் பிறந்தார் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி. சிறு வயதில் பெற்றோரை இழந்த சலீம், மாமாவிடம் வளர்ந்தார். இளம் வயதில் விளையாட்டுத் துப்பாக்கியால் ஒரு சிட்டுக்குருவியை சுட்டுவிட்டார். இறந்துபோன அந்த குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம். இதற்கான காரணத்தை தன் சித்தப்பாவிடம் கேட்டார். இந்த கேள்விக்கு விடை தேடும் முயற்சியாக, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த மில்லர்ட்டிடம் சலீமை அறிமுகப்படுத்தி வைத்தார் அவரது சித்தப்பா. மில்லர்டின் உதவியோடு பறவைகள் குறித்து அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்ட சலீமுக்கு அப்போது தான் அவற்றின் மீது காதல் பிறந்தது. 

வறுமையிலும் வாடாத சலீம்:
1918-ஆம் ஆண்டு சலீமுக்கு திருமணம் நடந்து முடிந்ததும் வறுமையும், வேலையின்மையும் அவரை வாட்டி வதைத்தது. அப்போது, தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்து பறவைகளை நோட்டமிடுவது வழக்கம். மும்பை தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் சலீமுக்கு ‘கைடு’  வேலை கிடைத்தது. இதன் பிறகு, பறவையியலில் தன் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக சலீம் அலி ஜெர்மனி சென்று இர்வின் என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், பறவைகளின் வாழ்வியல் தொடர்பாக பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1942-ஆம் ஆண்டு ’The Book of Indian Birds’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக 10ற்கும் மேற்பட்ட பறவைகளின் வாழ்வியல் தொடர்பான நூல் தொகுப்புகளை வெளியிட்டு, தன்னுடைய ஆயுட்காலத்தை பட்ஷிகளுக்காக அர்ப்பணித்தார். 

ஆயுட்கால அர்ப்பணிப்பு:
தமது வாழ்நாளின் பெரும்பான்மையான பகுதிகளை பறவைகளுடன் சேர்ந்து வனப்பகுதியில் கழித்த சலீம் இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்பட்டார். தமக்கு உண்ண உணவு இல்லாத நேரத்திலும் கூட பறவைகளுக்காக உணவு சேகரிப்பதில் இவர் காட்டும் ஆர்வத்திற்கு அளவே இல்லை. கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்த சலீம் சிறகில்லா பறவையாகவே வலம் வந்தார். இவருக்கு 1958-ல் பத்ம பூஷண், 1967-ல் பிரிட்டன் பறவையியல் கழக விருது, 1976-ல் பத்ம விபூஷண் உட்பட சில சர்வதேச விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

விண்ணுலகம் நோக்கி பறந்த சலீம்:
பறவைகளுக்காக வாழ்ந்த இந்த பறவை மனிதர் 1987-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது 90-வது வயதில் விண்ணுலகை நோக்கி பயணப்பட்டார். இவரது மறைவு பறவை பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்தது.

இவர் மறைந்தாலும் 'The fall of a sparrow' என்ற அவரின் சுயசரிதை புத்தகத்தின் மூலம் சலீம் இன்று வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். 

News Counter: 
100
Loading...

mayakumar